போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் காசா நகரத்தின் அல் துஃபா பகுதியில் வசிக்கும் கூட்டுக் குடும்பம் அது . 2025 ஏப்ரல் 15 அன்று அடுத்து நடக்கப் போகும் பேரவலத்தை அறியாத மன நிலையில் அவர்களின் கடைசி நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அன்று தான் அவர்களின் தலை விதியை தலைகீழாக மாற்றிப் போட்ட கொடூர நிகழ்வு ஒன்று அங்கே அரங்கேறி முடிகிறது.
அந்த கூட்டுக் குடும்பத்தின் வீட்டைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த கர்ப்பிணி பெண் உட்பட பத்து உறவுகள் என்ன நடக்கிறது என்று அறியாத நிலையில் பரிதாபமாக பலியாகினார்கள்.
என்ன நடந்தது....?
ஏன் இந்த வீட்டை மட்டும் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்த வேண்டும்? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் பாலஸ்தீனிய புகைப்பட பத்திரிகையாளரான பாத்திமா ஹசௌனாவை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளது என மேற்படி வினாக்களுக்கு விடையாக கிடைக்கின்றது.
யார் இந்த பாத்திமா ஹசௌனா,..?
காசாவில் கொடூர போர் ஏற்படுத்திய மக்களின் சிதறுண்ட வாழ்க்கையை அவற்றின் அன்றாட சோக வாழ்வியலை ஆவணப்படுத்தும் பணிக்காக அறியப்பட்ட துணிகரமான 25 வயதே நிரம்பிய புகைப்பட பத்திரிகையாளர் தான் அவர். அவர் ஒரு சமூக போராளி என்றே அறியப்பட்டவர்.
1999 ஆம் ஆண்டு காசா நகரில் பிறந்த அவர் காசாவில் உள்ள பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகக் கல்லூரியில் மல்டிமீடியா பட்டம் பெற்றவர்.
பாத்திமா ஹசௌனா பிரெஞ்சு-ஈரானிய இயக்குனர் செபிதே ஃபார்சியின் ஆவணப்படத்தின் முக்கிய கதாநாயகியும் ஆவார். அவரை மையக் கருப்பொருளாகக் கொண்ட ஆவணப்படம் , கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இந்த சோகத்திலும் துயரமான இந்த கொலைச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
போர் மண்டலத்திற்குள் இருந்து யதார்த்தங்களை முன்வைத்து முக்கியமாக ஓங்கி ஒலித்த அந்த பாலஸ்தீனிய குரல் மரணத்தால் மௌனித்துப் போனது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்வையாளர்களை மட்டுமல்ல சர்வதேச ஊடகத்துறையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய வைத்த இந்த சம்பவம் உலக அரங்கில் பேசு பொருளானது.
ஆவணப்படத் திரைப்படத் தயாரிப்பாளர் செபிதே ஃபார்சி ஹசௌனாவின் படத்தை கேன்ஸ் விழாவில் உயர்த்திப் பிடித்த போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி அஞ்சலி செலுத்தியது அவரின் ஆளுமையை - அவர் மேல் வைத்திருந்த அபிமானத்தை வெளிக்காட்டி நின்றது.
' அவர் மிகவும் எளிமையானவர், மிகவும் திறமையானவர். தைரியமானவர் . தான் எடுத்துக் கொண்ட பணியை நிறைவேற்ற எந்த கஷ்டமான சூழ்நிலைகளிலும் தயார் நிலையில் அவரின் பங்களிப்பு அபரிதமாக இருந்தது. அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நான் அவளிடம் எங்கள் இருவரினதும் கூட்டு முயற்சியில் உருவாகிய படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட இருப்பதாகவும், அதற்காக அவரை அழைக்கவும் பேசினேன்."என்று ஃபார்சி கூறினார்.
இஸ்ரேலினால் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குள் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைவதை இஸ்ரேல் தடை செய்திருந்த நிலையில், ஆவணப்படத் திரைப்படத் தயாரிப்பாளர் செபிதே ஃபார்சி கடந்த ஆண்டு வீடியோ அழைப்பு மூலம் ஹசோனாவைத் தொடர்பு கொண்டிருந்தார்.
பாலஸ்தீன மக்களின் சோகக் கதைகளை மக்கள் எதிர்நோக்கும் பட்டினிகள் மருத்துவ பற்றாக்குறையினால் குழந்தைகள் எதிர் நோக்கும் இறப்புகள் , வீடுகள் இழந்து, உடமைகளை இழந்து அநாதரவான மக்களின் துயர்கள் இவைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், சர்வதேசம் அதை அறிந்த அக்கறை கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் இதற்கு நீங்கள்தான் பொருத்தமானவர் என்று கூறி தனது ஆவணப்படம் பற்றி கலந்துரையாடுகிறார். இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் ஹசோனா.
போரின் அச்சுறுத்தல் ,மோசமான இணைய இணைப்பு , முரண்படும் விவாதங்கள் இவற்றின் மத்தியிலும் புன்னகையுடன் கூடிய அவளின் தைரியம் , 18 மாதங்களுக்கும் மேலான உழைப்பின் பலன் , அதன் உரையாடல்கள் அடங்கிய ஓளிநாடாக்கள் "உங்கள் கைகளில் உங்கள் ஆன்மாவை வைத்து பயணிக்கவும் " என்ற ஆவணப்படம் ஹசௌனாவின் அயராத முயற்சியிலும் பல அபாயகரமான அவள் உயிருக்கே பாதகம் ஏற்படும் சூழ்நிலைகளிலும் அவளின் துணிகர பாரிய பங்களிப்புடனான ஒத்துழைப்போடும் திரைப்படத் தயாரிப்பாளர் செபிதே பார்சியினதும் கூட்டு முயற்சியாக அது உருவாக்கப்படுகின்றது.
பார்சிக்கும் ஹசௌனாவுக்கும் இடையிலான ஒளிப்பதிவு உரையாடல்களைச் சுற்றியே படம் வருகிறது. ஹசௌனாவே அதன் கருப் பொருளாகவும் இருக்கிறார். காசாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த பரந்த பார்வையுடன் ஆராய்ச்சி செய்யும் இயக்குனர் இளம் பெண்ணான ஹசௌனாவுடன் இணையும் போது அது ஒரு காத்திரமான ஆவணப்படம் உருவாகின்றது.
பாத்திமா ஹசௌனா, காசாவில் வாழ்க்கையின் கதையைச் சொல்ல தனது "காசாவின் கண்" என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட அவரது புகைப்படக்கருவியைப் பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவத்தின் காசா பகுதியின் பொதுமக்கள் மீதான தாக்கம் ஹசௌனாவின் கண்களின் வழியாக காசாவின் யதார்த்த நிலையை படம்பிடித்ததில் தனது புகைப்பட பத்திரிகைக்காக பாத்திமா சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெறுகிறார்.
அவர் பதிவுகள் நெஞ்சை துயரத்தால் நிறைக்கின்றன.
இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு வயது குழந்தை உட்பட பதினான்கு உறவினர்களை இழந்ததை ஹசோனா விவரிக்கிறாள், அன்று அவளால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது தான் அடைந்த மன உளைச்சல்கள் போரின் உச்ச கட்ட கொடுமை என்பனவற்றை வார்த்தைகளால் விவரிக்கும் லாவகம் நெஞ்சைத் தொடுகிறது.
ஒரு சிறுமி இடிபாடுகளாக மாறிய ஒரு கோபுரத் தொகுதியின் முன் தனது தந்தையின் மடியில் கண்களில் ஒளி மங்க இருக்கிறாள்.
இன்னொன்றில், ஒரு சிறுவன் இரத்தம் தோய்ந்த நடைபாதையில் தண்ணீர் குழாய் மூலம் தனது சொந்த குடும்பத்தின் இரத்த எச்சங்களை சுத்தம் செய்ய முயற்சிப்பதன் காணொளிகள் கொடுமையிலும் கொடுமை.
கட்டிட இடிபாடுகள் . வீடுகளை உறவுகளை இழந்து தவிக்கும் நிராதரவான மக்களின் சோகங்களை அவள் கமராவில் மீட்டெடுக்கப்படுகின்றன. பட்டினியால் சுற்றி வர இருக்கும் குழந்தைகளின் மனதை உலுப்பும் மரணங்கள் நெஞ்சைப் பிழிய வைக்கின்றன.இப்படி எத்தனையோ அழிவுகளின் பதிவுகள் மனதை குளமாக்கி நிற்கின்றன.
வான்வழி; தாக்குதல்களின் கோர சம்பவங்களை பதிவு செய்த அவர் அதே கொடூர சம்பவம் தனக்கும் நடக்கும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
இஸ்ரேலிய இராணுவம் அவரது குடும்பத்தின் குடியிருப்பை குறிவைத்ததாக விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன, ஆயினும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஹமாஸ் போராளி அங்கு மறைந்திருந்தபடியாலே தாக்குதல் நடந்ததாக வழமையான சாக்குப் போக்கில் தங்களை நியாயப்படுத்துகின்றன.
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அல்லது ஊடகங்கள் ரஃபாவிற்குள் நுழைவதை இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்து தடை செய்து வருவதால், ஹசௌனாவை போன்ற காசாவிற்குள் இருக்கும் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள்தான் வெளி உலகிற்கு காசாவின் உண்மை நிலவரங்களை தகவல் அளிக்கும் முக்கிய ஆதாரமாக செயல்படுகிறார்கள்.இதையே ஊடகத்துறையினர் ஹசௌனாவின் புகைப்படங்களை "காசாவின் கண்" என்று விமர்சிக்கின்றனர்.
அவர் தனது மரணத்தை ஏற்கனவே அறிந்திருந்தார் என்ற கணிப்பில் அவர் இப்படி சொல்கிறார்.
"என் மரணம் வெறும் செய்தியாகவோ அல்லது ஒரு எண்ணாகவோ இருக்க விரும்பவில்லை, உலகம் கேட்கும் ஒரு மரணம், காலத்திலோ இடத்திலோ புதைக்க முடியாத ஒரு அற்புதமான மரணம் வேண்டும் " என்று தனது நண்பர்களுக்கு ஹசௌனா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக ஊடகங்களில் எழுதி பரபரப்பை உண்டாக்கி இருந்தார் . தீர்க்தரிசப் பார்வையுடனான அவர் ஆரூடம் உண்மையில் நிஜமாகித்தான் போனது. ஆனால் அது மனிதத்தை நேசிக்கும் நபர்களுக்கு மரண வலியை கொடுக்கின்றது.
ஹசௌனா அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவிருந்தார் என்பது மற்றொரு சோக செய்தி.
"மனிதகுலம் மற்றும் உலகத்திற்காக மட்டுமல்லாமல், தனது குழந்தைகளுக்காகவும், தான் என்ன அனுபவித்தாள் என்பதை அறிய இந்த போரை ஆவணப்படுத்துவதாக தனது ஆன்மாவை எனக்குள் திறந்தபடி அவர் என்னிடம் கூறினார்," என்று திருமதி ஃபார்சி நினைவு கூர்ந்தார்.
"அந்த வார்த்தைகள்தான் இந்த ஆவணப் படத்தை முடிக்கின்றன, இப்போது குழந்தைகள் இருக்காது. அவள் போய்விட்டாள்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள வாட்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் பப்ளிக் அஃபயர்ஸ்' இன் போர் செலவு திட்டத்தின் புதிய அறிக்கை காசாவில் போரினால் இறந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 232 என்று அறிவித்தது.
அதற்குள் சமூக ஊடகப் போராளியான ஃபாத்திமா ஹசௌனாவின் பெயரும் உள்ளடங்கிப் போனது பலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்ல ஊடகத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்பதில் சற்றும் ஐயமில்லை.
(சபா.தயாபரன்)