கூலி - கேலி - பாக்கெட் காலி
--------------------------------------
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் / ஏமாறுவார் இந்த நாட்டிலே!
பொதுவாக ரஜினியின் படங்களில் கதை என்ற வஸ்து இல்லாவிட்டாலும், கடைசி வரை முடிந்தவரை கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும். ஆனால் இந்தப் படம் இதற்கு முன்பு வந்த எல்லா படங்களையும் தூக்கி சாப்பிட்டுவிடும்படி மகா அலுப்பு தட்டும் தூங்கவைக்கும் படமாகவே ஆகிவிட்டது.
பொதுவாக கதை விவாதம் இப்படி தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். படம் கேரளாவில் ஓடவேண்டும் என்ன செய்ய ,ஓகே சௌபின் நடிக்க வைத்துவிடலாம். அப்போ ஆந்திரா , நாகார்ஜுனாவை கூப்பிடலாம். அப்போ கர்நாடகா நம்ம உபேந்திராவை கூப்பிடலாம்.
வடக்கே ஓட என்ன செய்வது , நம்ம அமீர்ஜி-யை கூப்பிடலாம். ரஜினி லோகேஷுடன், "நான் எல்லோரையும் கூப்பிட்டாயிற்று. இவர்களை வைத்து கதை செய்யவேண்டும். இனி உன் பாடு "- என்று சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.
மகாமட்டமான கதை .எவ்வளவு மோசமான கதையாய் இருந்தாலும் திரைக்கதையில் சரிசெய்துவிடலாம் என்பார்கள். இங்கே திரைக்கதை பல்லிளிக்கிறது. காமெடி என்ற பெயரில் இவர்கள் செய்யும் செயல்கள் மிக சீரியஸாகவும் ,சீரியஸ் என்று இவர்கள் வைத்த காட்சிகள் கிச்சுகிச்சும் மூட்டுகிறது.
லோகேஷ் கனகராஜ் அவர்களின் டெம்ப்ளட் கதையம்சம் நமக்கு தெரியும்தானே. அப்பாவியாய் ஒன்றும் தெரியாதவராய் கதாநாயகன் இருப்பார். ஆரம்பத்திலிருந்து ஒரு பீடிகை தொடர்ந்து வரும் . ( இது கூட பாட்ஷா படத்திலிருந்து உருவிய விஷயம் தான் ) . பிறகு கதாநாயகனுக்கு நெருக்கமான ஒருவர் கொல்லப்படும்பொழுது வெகுண்டு எழுந்து வில்லன்களை பழி வாங்குபவர்.
இடையில் வில்லன்கள் மட்டும் தங்களால் முடிந்தவரை எல்லாவற்றையும் கொன்று போட்டுக்கொண்டே செல்வர். மருந்துக்கும் அங்கே காவல்துறையினருக்கு வேலையில்லை. அதே டெம்ப்ளட்-ஐ தான் இந்த படத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். ஒரே ஒரு நிம்மதி போதைப்பொருள் மாபியா இல்லை. அதற்கு பதில் நமக்கே சிரிப்பு வரும் ஒரு வேலையை வில்லன் செய்கிறார். நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இதயம் பலவீனமானவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தில் வரும் வில்லன்களை பற்றி ஒரு தனிக்கட்டுரையே எழுத வேண்டும் .அவர்களுக்கு பெரிய கூட்டம் கையில் இருந்தாலும் அவர்கள் கையால் எதிர்த்தவர்களை போட்டுத்தள்ளுகின்றனர். எல்லா இடத்திலும் cctv இருந்தபோதிலும் அவ்வளவு எளிதில் தமது கூட்டத்தில் இருப்பவர்களுடன் ஏமாறும் இளகிய மனம் படைத்தவர்கள். படம் முழுவதிலும் சுத்தியலே வருகிறது.
லோகேஷ்-அவர்களுக்கு சுத்தியல் ,கொக்கி ,பம்பரம் ,கோடாரி போன்றவை எல்லாம் ரொம்ப பிடிக்குமென்று நினைக்கிறேன். நாம் 2025 ஆம் ஆண்டில் வாழ்ந்தாலும் வில்லன்கள் இந்த பழைய ஆயுதங்கள் கொண்டே எதிரிகளை தாக்குகின்றனர் இல்லை சாகின்றனர்.
வில்லன் நாகார்ஜுனா என்ன செய்கிறாரென்று தெரியவில்லை. கோடிக்கணக்கில் கடத்தல் பொருட்களிலிருந்து காசு வரும்பொழுது எதற்காக உறுப்பு கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றார் என்று தெரியவில்லை. இதில் இறந்த உடல்களை அப்புறப்படுத்த ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கிறார்கள் . அபாரம். நல்லவேளை நிகோலா டெஸ்லா இறந்துவிட்டார். இந்த கரண்ட் கம்பி சாகசம் எல்லாம் பார்ப்பதற்கு முன்பே. இரண்டு பட்டன்களை அழுத்தி ,நான்கு லிவர்களை தள்ளும் இந்த ராக்கெட் ரகசியம் எந்த வில்லன்களுக்கு தெரியவில்லை. கடல் கடந்து கடத்தல் வேலை செய்ப்பவர்களுக்கு.
மிகவும் அப்பாவியாக ரஜினியை எளிதில் நம்பிவிடுகின்றனர். கழுத்திலும்,கையிலும் கம்பியை மாட்டிவிட்டு பிறகு சுருதியை துரத்தி வருகிறார் சௌபின். இதெல்லாம் பார்க்கும்பொழுது நமக்கே சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வில்லியின் சண்டைக்காட்சிகள் இருக்கிறது. தவறவிட வேண்டாம். ரத்தம் , படம் முழுவதும் ரத்தம். ஒன்று கொன்றுகொண்டேயிருக்கிறார்கள்.இல்லையென்றால் யாரிடமாவது அடி வாங்கி ரத்தம் கக்கிக்கொண்டே இருக்கிறார்கள்
படத்தின் ஆரம்பத்திலிருந்தே பீடிகை கொடுத்துவந்த அந்த 30 வருட பிளாஷ்பேக் காட்சி திராபை . கொட்டாவி விட வைக்கிறது. இதற்கு ஏன்டா இவ்வளவு பில்ட் அப். படம் முடிந்துவிட்டது என்று எழுந்து செல்லலாம் என்று பார்த்தால் நமது அமீர்ஜியின் காமெடி பிரவேசம் இருக்கிறது. நான் விழுந்து விழுந்து சிரித்த பகுதி இதுதான். ஹெலிகாப்ட்டரில் வந்து பீடி குடிக்கிறார் ,பிறகு தனது கூட்டத்தை சேர்ந்தவர்களை ரகரகமான துப்பாக்கிகள் கொண்டு சுடுகின்றார். அதற்கு எதற்காக அப்படி ஒரு பாலைவனத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. நல்லவேளை நான் எதோ பீரங்கி அல்லது ஏராளமான தோட்டாக்களை கொண்டு அனைவரையும் பழி வாங்கும் ( கைதி / விக்ரம் வகையறா ) காட்சிகளை வைக்கவில்லை. இன்னொரு ஆறுதல் ரஜினிக்கு டூயட் காட்சிகள் இல்லை.
ரஜினியின் பெரும்பாலான ரசிகர்களுக்கு 50 வயதைக் கடந்திருக்கும். இதுநாள் வரை அவர்களை அரசியலுக்கு வருவேன் என்று தொடர்ந்து ஏமாற்றியபிறகு, இப்பொழுது இந்த மாதிரி படம் எடுத்து அவர்களில் பாக்கெட்களை காலி செய்து கொண்டிருக்கிறார் நமது மார்ககண்டேய ரஜினி. கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நமது தலைவர்(?) , வெறும்பணம் என்று சொல்கிறார். உச்சகட்ட ஆத்திரம்.
குறைகள் மட்டும் தானா . படத்தில் நிறைகளே இல்லையா ? . தெரியவில்லை. ஒரு காட்சி கூட சொல்லிக்கொள்ளும்படி இல்லை. லாஜிக் என்றால் கிலோ என்னவென்று கேட்கும்விதமாக படம் எடுத்துவைத்திருக்கிறார்கள். வயிறு எரிகிறது. படம் நெல்லூர் ,விசாகப்பட்டினம் ,சென்னை மற்றும் எந்த ஊரென்ற தெரியாத பாலைவனம் என்று செல்கிறது. கூகிள் வரைபடங்களுக்கு சவால் விட்டிருக்கிறார்கள். வில்லன்கள் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு தாவி தாவி செல்கின்றனர்.
chatgpt உபயோகிருத்திருந்தால் இதைவிட மிகச்சிறப்பான திரைக்கதை கிடைத்திருக்கும். கற்பனை வறட்சி என்றே சொல்ல முடியும். எவ்வளவு நல்ல நாவல்கள் தமிழில் இருக்கின்றன. அதையெல்லாம் திரைபடம ஆக்கலாம் இல்லையா ? செய்ய மாட்டார்கள். அதற்கெல்லாம் கடின உழைப்பு வேண்டும். இவ்வளவு நட்ச்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு ஒரு கமர்சியல் குப்பையைத் தர முடிகிறது. ரஜினி போன்ற நடிகரிடம் நாம் எதிர்பார்ப்பது அவர் அமிதாப் போன்ற நடிகர்களின் வழியினைப் பின்பற்ற வேண்டும் என்பதே. இன்னும் கதாநாயகனாகவே நடிப்பேன் என்று அடம்பிடிக்கக்கூடாது.தமிழ்ப்பட ரசிகர்களை நோக்கி எடுக்கப்பட்ட மாபெரும் கேலிச்சித்திரம் தான் இந்தக் கூலி.
எழுத்தாளர் சாம்ராஜ் "சக்கரவர்த்திகள் இல்லாத காலத்தில் " என்று ஒரு அருமையான கட்டுரை எழுதியிருப்பார். அந்த கட்டுரையில் எவ்வாறு 1977 முதல் 1980 வரையிலான காலகட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லியிருப்பார். அதாவது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி போன்ற சக்கரவர்த்திகள் சினிமாவிலிருந்து ஒய்வு பெற்றபிறகான காலகட்டத்தில் தமிழில் மிக நல்ல படங்கள் வந்தன. அதே போன்று தமிழில் என்று நல்ல படங்கள் வரும். ஒவ்வொரு முறையும் அவ்வாறான சூழ்நிலை வரும்பொழுது சக்கரவர்த்திகள் நம்மை விடுவதேயில்லை. சில நேரங்களில் வயதான அரசர்களும்.