- கருணாகரன்
இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான புவிசார் பிராந்திய அரசியல் ஆதிக்கப்போட்டியில் இலங்கையின் தென்பகுதியில் சீனாவின் செல்வாக்கு (பிடி) அதிகம். தென்பகுதியை இழந்து நிற்கும் இந்தியா, வடக்குக் - கிழக்கில் தன்னைப்பலப்படுத்துவற்குத் தீவிரமாக முயற்சிக்கிறது. இதற்காக அது திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களின் விருத்தி, பலாலி விமானத்தள அபிவிருத்தி, யாழ்ப்பாண கலாச்சார மைய நிர்மாணம், பல்கலைக்கழங்களுக்கான நிதி அளிப்பு, திருகோணமலை சிவன்கோவில் புனரமைப்பு, மன்னார் – திருக்கேதீஸ்வரம் செழுமையூட்டல் என்று பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கியமான ஒரு மையம் மன்னாராகும்.
மன்னார்க்கடல் இந்தியாவுக்கு அண்மையாக உள்ளது என்பது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் எண்ணெய் வளமிருப்பதாகக் கருதப்படுவதும் இந்தியாவின் கரிசனைக்கு ஒரு முக்கிய காரணமாகும். அதோடு அங்கே இல்மனைற் என்ற கனிம வளமும் உண்டு. அதை அகழ்ந்து எடுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அது இந்தியாவின் கைகளுக்கு அப்பால் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
அதைப்போல மன்னார் நிலப்பகுதியிலுள்ள பேசாலை, தாழ்வுபாடு போன்ற பகுதிகளில் காற்றாலை எனப்படும் (WinMin) காற்றடி மூலம் மின்சாரத்தைப் பெறும் திட்டத்துக்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்தத் திட்டம் இந்தியாவின் முதலீடு. ஆனால், இதற்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
மக்களுக்கு இந்தியா, இலங்கை அரசு, சீனா என்பதெல்லாம் பொருட்டே இல்லை. தங்களுடைய வாழ்க்கைச் சூழலே முக்கியம். அது பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஏற்கவும் முடியாது. ஏனென்றால், அது அவர்களுடைய வாழ்க்கையாகும்.
குறிப்பாக உள்ளுர் இயற்கைச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவே இந்தக் காற்றாலைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆனால், சூழல் பாதிப்புக் குறித்த ஆய்வுகளின் பின்னரே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இருந்தாலும் மன்னார்ப் பிரதேச மக்கள் அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அரசாங்கத்துடன் பேசக் கூடிய சூழல் உருவாகியது. அதன் விளைவாக தற்போது காற்றாலை மற்றும் இல்மனைற் அகழ்வு ஆகிய திட்டங்கள் இடைநிறுத்தி வைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்தத் திட்டங்களுக்கெனக் கொண்டு வரப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பிறிதொரு இடத்தில் களஞ்சியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்கள் அமைப்புகள் இதனை எதிர்த்து வந்திருக்கின்றன. அதற்குக் காரணங்களும் உண்டு.
1. காற்றாலைகள் சூழலிப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
2. குறித்த பகுதிகளில் மீன்பிடிக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காற்றலைகளின் தாக்கத்தினால் மீன் பாடு குறைகிறது.
3. பறவைகள், மற்றும் தாவரங்கள் பாதிப்பைச் சந்திக்கின்றன.
4. காற்றாலைகள் அமைக்கப்படும் இடங்களில் வெள்ளநீர் பாய்ந்து செல்வதற்கான தடுப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.
5. காற்றாலை மற்றும் இல்மனைற் அகழ்வு போன்றவை வளச்சுரண்டலே தவிர, அபிவிருத்தி அல்ல. இயற்கை வளங்களைச் சுரண்டிச் செல்லும் உபாயத்தையே அரசாங்கத்தின் அனுசரணையோடு வெளிச்சக்திகள் செய்கின்றன. மற்றும்படி மக்களின் மீதான கரிசனையினால் அல்ல. ஆகவே இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது.
6. எத்தகைய திட்டங்களையும் ஒரு பிரதேசத்தில் மேற்கொள்வதாயின் அந்தப் பிரதேச மக்களுடைய நலன் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மட்டுமல்ல, மக்களுடைய ஒப்புதலுடன்தான் அதைச் செய்ய வேண்டும். இந்தத் திட்டங்கள் எவையும் அப்படிச் செய்யப்படவில்லை. இவை முந்திய ஆட்சியாளர்கள் பெற்றுக் கொண்ட தனிப்பட்ட நலன்களுக்காக மன்னாரில் திணிக்கப்பட்டவை என்பதாகும்.
மன்னாரில் மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களும் இயற்கை வளத்தைச் சுரண்டுவதாக அமைகிறதே தவிர, மக்களுக்குப் பயனுடையதாக இருப்பதில்லை. இவ்வளவுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இவை. மட்டுமல்ல, கடந்த 40 ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்படாதிருந்தவை.
ஆகவே இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் பயனுடையவையாக இருக்க வேண்டும். இலங்கை அரசும் சரி, இந்தியாவும் சரி, சீனாவும் சரி இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களுக்குப் பயன் தராத திட்டங்களை மக்கள் எதிர்த்தே தீருவர். அவர்களுக்கு வேறு வழியில்லை. கிளிநொச்சி மாவட்டத்திலும் இதேபோன்றதொரு இயற்கை வளச் சுரண்டலுக்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அது யப்பானிய நிறுவமொன்றின் முயற்சி. கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பொன்னாவெளிப் பிரதேசத்தில் சுண்ணக்கல்லை அகழ்ந்து சீமெந்து தயாரிப்பதற்கான திட்டமே அதுவாகும். அதை மக்கள் எதிர்த்ததால் அந்தத் திட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக மக்கள் போராடியே தங்களுடைய சூழலையும் வளங்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் அரசாங்கத்தோடும் வெளிச்சக்திகளோடும் போராட வேண்டியுள்ளது. நல்லவேளை, ஓரளவுக்கு மக்கள் நிலை நின்று சிந்திக்கக் கூடிய அரசாங்கமாக இன்றை ஆட்சித் தரப்பு இருப்பதால் இந்தளவுக்கு (இடைநிறுத்தம் செய்யும் அளவுக்கு) நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்தியா இலங்கையின் வடக்குக் கிழக்குச் சூழலையாவது தனக்குச் சாதகமாக வைத்திருக்க விரும்பினால், இந்தப் பிராந்தியங்களில் மக்களுக்குப் பொருத்தமான – மக்கள் நலனை முதன்மைப்படுத்திய முதலீடுகளை மேற்கொள்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து, இந்தியாவிலிருந்து திருகோணமலைக்குத் தரைவழிப் பாதை அமைக்கப்போகிறோம், சேதுக் கால்வாயை அகழப்போகிறோம் என்றெல்லாம் கதை சொல்வதில் பயனில்லை.
குறிப்பாக காங்கேசன்துறைத் துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தையும் மேலும் வளப்படுத்தி, மக்கள் தாராளமாகப் பயணம் செய்யக் கூடிய நிலையை ஏற்படுத்தினாலே முதற்கட்ட வெற்றி. இப்படிச் சாதகமாகச் செய்யக் கூடிய பல பணிகள் உண்டு. மட்டுமல்ல, கேரளக் கஞ்சாவைக் கட்டுப்படுத்தினாலே பெரிய புண்ணிமாகும்.
இவை ஒரு புறமென்றால், மன்னாரில் மீன் பிடிக்கவும் அட்டை குளிக்கவும் முடியாத நிலை வேறு வந்துள்ளது. இதைப்பற்றி மன்னார் மீனவர்களே கதைகதையாகச் சொல்கிறார்கள்.
“மன்னாரில் முத்துக் குளித்த காலம் ஒன்றிருந்தது. அது மன்னாருக்குச் சிறப்பானதொரு வரலாற்று முகத்தைப் பெற்றுத் தந்தது. பின்னாட்களில் முத்துக்குளிப்பைப் பற்றிய கதைகள் மட்டும் மிஞ்சினவே தவிர, முத்துக் குளிப்பு இல்லாமல் போய் விட்டது. பிறகு, அட்டை குளித்தோம். இப்பொழுது அதையும் செய்ய முடியாமல் போயிருக்கிறது என்று மன்னாரில் உள்ள ஒரு கடற்தொழிலாளி சொல்கிறார். மேலும் அவர் சொல்லும்போது “அட்டை குளிக்கலாமென ஒருவாரம் சிலாவத்துறையில் போய் நின்றேன். ஒருகாலத்தில் தோணி நிறைந்த அட்டைகளை அள்ளித்தந்த அல்லிராணிக்கோட்டைக் கடலில்தான் இப்போதெல்லாம் ஒன்றிரண்டு அட்டைகளையாவது குளிக்க முடியும். ஆனால் அந்தக் கடலிலும் இறங்க முடியாது. உள்ளூர் மாஃபியாக்களின் அட்டூழியம்“ என்கிறார்.
‘அதென்ன உள்ளுர் மாஃபியாக்களின் அட்டூழியம்?‘ என்று நீங்கள் கேட்கலாம்.
மன்னார்க் கடலில்தான் கேரள கஞ்சாப் பொதிகள் தொடக்கம் போதைப்பொருட்கள் எல்லாம் அதிகளவில் இறக்கப்படுகின்றன. பொலிஸ் மற்றும் கடற்படையினரால் பிடிக்கப்படுகின்ற கேஸ்கள் மிகச் சொற்பம். தப்பிவிடுவதே அதிகம். இதில் உள்ளூர் அரசியல்வாதிகளிலிருந்து பெரிய இடம் வரையில் பல கைகள் சம்மந்தப்பட்டுள்ளன.
இதைப்பற்றி அந்தத் தொழிலாளி மேலும் விவரித்தார், “இவர்கள் கடத்திக்கொண்டுவரும் கேரள கஞ்சாப் பொதிகளை நாங்கள் அட்டை குளிக்கிற இடங்களுக்குக் கிட்டவாக நங்கூரம் கட்டி கடலுக்கடியில் பதுக்கி, GPS அடித்து வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த ஏரியாவுக்குள் அட்டை குளிக்க விடாமல் துரத்தியடிக்கிறார்கள். போதாக்குறைக்கு அட்டைப் பண்ணைகளில் கஞ்சாப் பொதிகளைப் பதுக்கியும் வைத்திருக்கிறார்கள். நடுக்கலில் நங்கூரமிட்டு வைக்க முடியாது.
அப்படி வைத்தால் அவர்களுடைய பொருட்களுக்குப் பாதுகாப்பு குறைவு. ஆனால், கடலட்டைப் பண்ணைகள் கஞ்சாக் கடத்தலுக்குப் பெரும் பாதுகாப்பு. ஏனென்றால், அட்டைப்பண்ணைக் காவல் என்ற பெயரில் கடத்தலை வலு சுலமாகச் செய்யலாம். கடற்படைக்கும் பொலிசுக்கும் தண்ணி காட்டலாம். அட்டைப் பட்டிக்களுக்குள் பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவுக்குச் சிலர் காவலிருக்கிறார்கள். இதில வேடிக்கை என்னவென்றால், அட்டைப் பண்ணைகளுக்கான அரச அனுமதிப் பத்திரம் என்ற பெயரில் கஞ்சாப் பொதிகளுக்கும் அரச அனுமதியோடு காவல். ஆட்சி மாறினால் என்ன, கட்சி மாறினால் என்ன, கெட்டிக்காரக் கள்வர்களுக்கு எல்லாம் ஒன்றுதான்…“
இதைப்பற்றி நீங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அல்லது கடற்தொழில் அமைச்சரிடம் முறையிடவில்லையா? என்று கேட்டேன். முறைப்பாடுகளைச் செய்து கொண்டுதானிருக்கிறம். அதை விட, அவர்களுக்கு இதெல்லாம் தெரியும். யாரும் நடவடிக்கை எடுக்கிறார்களில்லை என்றார் எரிச்சலும் கவலையும் தொனிக்க. மட்டுமல்ல, ஒரு சிறிய குற்றப்பட்டியலையும் சமர்ப்பித்தார்.
1. நூற்றுக்கணக்கான பண்ணைகளில் அட்டைகளே இல்லாமல் வெறும் பட்டிகள்தான் காணப் படுகின்றன.
2. காவல் கொட்டில்களில் தினமும் காவலாளிகள் நிறைவெறியில் காணப்படுகிறார்கள்.
3. பயன்பாடற்ற வெற்றுப் பண்ணைகள் ஏன் கடல்களை அடைத்து நிற்கின்றன என்று கேட்பதற்கு எந்தக் கடற்தொழிற் சங்கத்துக்கும் வல்லமை இல்லை.
4. சங்கங்களில் இருக்கும் தலைமைகளில் பெரும்பாலானோர் அட்டைப்பண்ணை முதலாளிகளின் ஆட்கள்
5. . பண்ணைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் பிரதேச அதிகாரிகள், அந்தப் பண்ணைகள் எல்லாவற்றிலும் அட்டை வளர்க்கப் படுகிறதா என்று கண்காணிப்பதில்லை.
இதைப்பற்றி இன்னொரு கடலோடியான தமயந்தி விமல் சொல்கிறார், “முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு சொந்த நண்பனே ஆண்டவரைக் காட்டிக் கொடுத்ததுபோல், கடலின் சொந்த மக்களாலேயே கடல் காட்டிக் கொடுக்கப்படுகிறது” என்று.
இதற்கெல்லாம் பதில்தான் என்ன? முடிவுதான் என்ன?