அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பாடசாலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
395 குழந்தைகள் படிக்கும் குறித்த பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், பாடசாலையில் உள்ள தேவாலயத்தில் குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல் வெளியாக திடீரென குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார்.
ரைபிள், ஷாட்கன், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்களை கொண்டு அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 குழந்தைகள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 7 குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய நபரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மினசோட்டாவில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் அவரை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும், 20 வயது நபரான இவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தேவாலயம் குறித்த தகவல்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.