சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் 48 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் பதிவான குனார் மாகாணத்தின் பாதிக்கப்பட்ட அதே பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏர்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை, ஆயிரத்து 411ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கடந்த 31ம் திகதி நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இருந்த நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
குனார் மாகாணத்தில் மிக மோசமான அழிவு ஏற்பட்டது. மூன்று கிராமங்கள் அங்கு தரைமட்டமாயின.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள், மலைப்பாங்கானவை என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து ஏற்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் உதவியை தலிபான் கோரியுள்ளது.