பிருந்தாபன் ஜெ
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதும் பல்வேறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இன்னமும் அடையாளம் காணப்படாமல் மறைந்திருக்கின்றன. அடையாளம் காணப்பட்டும் கண்டுகொள்ளப்படாதிருக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் இதுவரையில் 10 இற்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதில் முதலாவது செம்மணி மனிதப் புதைகுழி ஆகும். 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து வகைதொகையற்ற கணக்கில் தமிழ் இளையோர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். விசாரணைக்கென வெள்ளை வான்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் யாரும் வீடு திரும்பவில்லை. இந்த இளைஞர்கள் அனைவரும் கொன்று புதைக்கப்பட்டுவிட்டனர் என்கிற தகவல் கிருசாந்தி படுகொலை வழக்குத் தீர்ப்புடன் வெளியாகியது.
அவ்வாறு கடத்தப்பட்ட, கைதுசெய்யப்பட்ட, அழைத்துச்செல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் பல 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவ்வாறு 15 வரையான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதோடு செம்மணி அகழ்வு நிறுத்தப்பட்டது. மீட்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளுமே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும் அடையாளம் காணப்பட்டது.
அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு திருக்கேதீச்சர ஆலயத்திற்கு அண்மையில் நீர்ப்பாசன அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகளை அமைக்கும்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வின்போது 80 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. பொதுமக்களுடையவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகளின் தொகுதியானது இரசாயனப் பகுப்பாய்விற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அத்தோடு இந்த மனிதப் புதைகுழி பற்றிய செய்திகள் அடங்கிப்போயின.
கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னாரின் நகரப் பகுதியில் சதொச கட்டட அமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வி்ன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வாய்வின்போது 350 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. 1999ஆம் ஆண்டுக்கு முன்பு மன்னார் தீவுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களினுடையதாக இந்த எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்றும், மன்னார் பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் மக்கள் சந்தேகமடைந்தனர்.
ஆனால் இந்த எலும்புக்கூட்டினை அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பி இரசாயனப் பகுப்பாய்வு செய்தபோது, 14ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிக்குரியனவாக கால கணிப்பு செய்யப்பட்டது. இதனால் இந்த எலும்புக்கூடுகள் சங்கிலிய மன்னன் கிறிஸ்தவ மதமாற்றத்திற்குள்ளானவர்களைப் படுகொலைசெய்து புதைத்தாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவில் கூட பலத்த சந்தேகம் இருந்தது. ஆயினும் இதற்குப் பிறகு அகழ்வுகள் இடம்பெறவில்லை. தற்போது மன்னார் நகரின் குப்பைகள் கொட்டப்படும் பகுதியாக இந்தப் புதைகுழி காட்சியளிக்கின்றது.
2023ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் நீர்ப்பாசனக் குழாய்களைப் புதைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அரச பணியாளர்கள், அங்கே மனித எலும்புக்கூடுகள் மேல்வருவதை அவதானித்தனர். அதனையடுத்து பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இடம்பெற்ற மனிதப் புதைகுழி அகழ்வின்போது, 52 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மனித எலும்புக்கூடுகளோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது எனச் சந்தேகிக்கப்படும் ஆடைகள், தகடுகள், துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டன. முறைப்படியாக அல்லாமல் திறந்த குழியொன்றின் மீது கொல்லப்பட்டவர்களை தூக்கி வீசியது போலவும், உயிரோடு குழிகளுக்குள் இட்டு துப்பாக்கியால் சுட்டதைப்போன்றதுமான மனித எலும்புக்கூடுகள் காணப்பட்டன. இவை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மணலாறு இராணுவ முகாம் தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இருக்கலாம் என அகழ்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இந்த அகழ்வுக்குழிகளிலிருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காண்பதற்கான விளம்பரப்படுத்தல்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வருடத்தில் யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மயான கட்டுமானப் பணியின்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களாக 54 நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வின்போது 240 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடும் பொம்மை, பாடசாலைப் பை, வளையல்கள், காலணிகள், துணி, இறப்பர் மாலைகள் எனப் பல தடயப்பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. இலங்கையிலேயே இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகவும் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழியில் அதிகளவில் சிறுவர்களினுடையவை எனச் சந்தேகிகப்படும் மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேற்குறித்த ஐந்து மனிதப்புதைகுழிகளும் வடமாகாணத்தில் உள்ளன. இந்தப் புதைகுழிகளில் தமிழர்களே கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கும், இவ்வாறு கொன்று புதைத்தவர்களாக இராணுவத்தினரே இருப்பர் என்பதற்கும் வலுவான சான்றுகளும் உண்டு. இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள், வெள்ளைவான்களில் கடத்தப்பட்டவர்கள், விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டவர்கள் இந்தப் புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற விடயமும் வலுவாக நம்பிக்கைக்குரியதாக மாறிவருகின்றது.
எனவே இந்தப் புதைகுழிகள் தமிழ் இனப்படுகொலைக்கான சான்றாதாரங்களாகக் கொள்ளத்தக்கவை என்ற ரீதியிலும், இந்தப் புதைகுழிகள் விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு, அகழ்வுகளில் பங்குற்றி, தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற விடயத்தை தமிழ் அரசியல் தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மனிதப் புதைகுழிகளின் தன்மை, அங்கு புதைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகளின் தன்மை ஆகியவற்றை வைத்து சர்வதேச சமூகமும் தனது கரிசனைகளை இதுவிடயத்தில் வெளிப்படுத்தி வருவதை அண்மையில் வெளியான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலும் பார்க்கக்கிடைத்தது.
இந்நிலையில் இராணுவத்தரப்பு மாத்திரம் இலங்கையில் மனிதப் புதைகுழிகளோடு தொடர்புபடவில்லை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புண்டு என்கிற கோணத்தில் சில அரசியல் வித்தைகளை தேசிய மக்கள் சக்தி அரசு வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.
அந்த அரசியல் கோமாளித்தனத்தின் முதற்தொடக்கமாக துணுக்காய் மனிதப் புதைகுழி காட்டப்படுகின்றது. இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள், துணுக்காய்க்கு கொண்டுவரப்பட்டு அங்கு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டார்கள் என்கிற கதையை ஈழத்தமிழ் இலக்கியவாதிகளில் ஒரு தரப்பினர் நீண்டகாலமாக சொல்லி வருகின்றனர். ஆனால் அதற்கான வலுவான சான்றுகள் எவையும் அந்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எவரிடமும் இல்லை. வாய்வழிக்கதையாக இந்தக் குற்றச்சாட்டு உலாவி வந்தது.
அண்மைக்காலமாக இலங்கை அரசின் புலனாய்வுக் கட்டமைப்பானது, தமிழ் சமூகத்தினுள் ஆழமாக இறங்கி வேலைசெய்கின்றது. புலனாய்வுத் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு இயங்கக்கூடிய தரப்பினரை வைத்து இலங்கை அரசு தமிழ் மக்கள் மத்தியில் செய்யவேண்டிய பல வேலைகளையும் செய்துவருகின்றது. தமிழ்ச் சமூகத்தினுள் பிளவுகளை ஏற்படுத்துவது, வன்முறைகளை தூண்டுவது, குற்றச்செயல்களைத் தூண்டுவது, சாதியப் பிரச்சினைகைளத் தூண்டுவது, போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்குவது எனப் பலவேலைகளை இந்தத் தரப்பினரை வைத்து சாதிக்கின்றனர். தற்போது அரசுக்கு சவாலாக மாறிவருகின்ற மனிதப்புதைகுழி விடயத்தினையும் இத்தகைய புலனாய்வுத்துறையின் அனுசரணையில் இயங்குகின்ற தரப்புக்களைக் கொண்டு கையாளத் தொடங்கியிருக்கின்றனர்.
அதனடிப்படையில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி துணுக்காய் மனிதப் புதைகுழி விடயத்தை வெளிக்கொணர்கிறோம் என உள்ளூர் மக்களுடன் முரண்பட்டு, அதனை காணொலிகளாக வெளியிடுகின்றனர். ஆனால் உள்ளூர்வாசிகளோ மனிதப் புதைகுழி என அடையாளப்படுத்தப்படும் இடத்தில் தாமறிந்த காலம் தொட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் நெல் உற்பத்தி நிலையமும், பொதுமக்களின் விளையாட்டு மைதானமும் மாத்திரமே இருந்தாக ஆதாரபூர்வமாகக் கூறிவருகின்றனர்.
மறுபுறம் கிழக்கு மாகாணத்தில் முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து செயற்பட்ட காலத்தில் மேற்கொண்டதாக சொல்லப்படும் குருக்கள்மடப் மனிதப் புதைகுழியை அகழவேண்டும் என்கிற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. வடக்கில் எங்காவது மனிதப் புதைகுழி அகழப்படும் செய்திகள் வெளிவரத் தொடங்கிய உடனேயே கிழக்கின் குருக்கள் மட மனிதப் புதைகுழியையும் அகழவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுவது பொதுப்போக்காகவே இதுவரை இருந்து வந்தது. ஆயினும் இதுவரையான அரசுகள் குருக்கள்மட மனிதப் புதைகுழி விடயத்தைப் பெரிதாகக் கணக்கிலெடுக்கிவில்லை.
அந்த அரசுகளோடு முரளிதரன் எனப்படும் கருணா நெருக்கமானவராகக் காணப்பட்டமையால் அதனை அகழ்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு குருக்கள் மட மனிதப் புதைகுழியையும், அதேபோல பிள்ளையான் தரப்பினர் கடத்திக்கொன்று புதைத்த புதைகுழிகளையும் அகழ்வதில் ஆர்வம் காட்டிவருகின்றது. கடந்த வாரம் குருக்கள் மடப் புதைகுழி பகுதிகளை பார்வையிட்ட நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார, தாம் அனைத்து மனிதப் புதைகுழிகளையும் அகழ்வோம் எனச் சூளுரைத்திருக்கிறார்.
சமநேரத்தில் திருகோணமலையின் சம்பூர் பகுதியில் மிதிவெடி அகற்றல் பணிகளின்போது மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. அதனை அகழ்வதற்கான நிதிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், அதற்கு அரசு இன்னமும் பதிலளிக்கவில்லை. யாழ்ப்பாணத்தின் மண்டைதீவுப் பகுதியில் 1990ஆம் ஆண்டு இராணுவம் கைதுசெய்த 158 பேரைக் கொன்று அங்குள்ள கிணறு ஒன்றில் புதைத்தது என்றும், அந்தப் புதைகுழிகளை அகழவேண்டும் என்றும் மிக நீண்டகாலமாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இந்தப்படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டபோதும்கூட இது வலியுறுத்தப்பட்டதோடு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இந்த மனிதப் புதைகுழியை அகழக்கோரி முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
இதே காலப்பகுதியில் மண்டைதீவில் சர்வதேச விளையாட்டரங்கம் அமைக்க ஆர்வம் காட்டிவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அப்பகுதிக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி அவரோ அல்லது அரசோ மண்டைதீவு மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மண்டைதீவு மனிதப்புதைகுழி அகழ்வு குறித்து வாய்திறக்கவில்லை. அரசின் மீது மனிதப்புதைகுழி விடயத்தில் ஏற்படும் அழுத்தத்தையும், இராணுவத்தின் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களையும் தவிர்ப்பதற்கு இல்லாத மனிதப் புதைகுழிகளை மாத்திரம் அரசு தேடிக்கொண்டிருக்கிறது.