ஷாங்காய் மாநாடும்- சீன இராணுவ அணிவகுப்பும் !
சீன இந்திய ரஷ்ய முத்தரப்பும்
அமெரிக்க சீற்றமும்:
- ஐங்கரன் விக்கினேஸ்வரா-
இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பானிய சாம்ராஜ்ஜியம் சரணடைந்த வெற்றியை கொண்டாடும் வகையில், உலகமே கண்வைத்துப் பார்க்கும் அளவுக்கு சீனாவில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடந்தது.
மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் இருபத்தாறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டுகளித்தனர்.
அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி செய்கிறது என்றும், நளினமாக புடின், கிம் ஜாங் ஆகியோருக்கு வாழ்த்துகள் எனவும் ஆதங்கத்துடன் டிரம்ப் தெரிவித்துள்ளமை, அமெரிக்காவிற்கு எதிரான சக்திகள் உருவெடுப்பதை அடியோடு நிறுத்த முயல்வது வெளிப்படையாக தெரிகிறது.
ஜப்பானிய சாம்ராஜ்ஜிய சரணடைவு:
இரண்டாம் உலகப் போர் முடிவின் எண்பதாவது நினைவு தினத்தை முன்னிட்டு சீனாவில் மிகப்பெரிய செப்ரெம்பர் மூன்றில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.
இந்த அணிவகுப்பை 26 உலக நாடுகளின் தலைவர்கள் கண்டுகளித்தனர். இதில் மிக முக்கியமான தலைவர்கள் இருவர். ரஷ்ய அதிபர் புடின், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இந்த இரு நாட்டுத் தலைவர்களும் ராணுவ அணிவகுப்பைக் கண்டுகளித்த புகைப்படம் இப்போது இணையத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜின்பிங், ஜப்பானின் ஆதிக்கத்திற்கு எதிராக சீனா வெல்வதற்கு காரணமாக இருந்த உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
சீனாவின் அணிவகுப்பும் பலமும்:
சீனா அரசு தனது படை, ஆயுத மற்றும் ராணுவ பலத்தைக் காட்ட புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், போர் விமானங்கள், ஆரம்ப எச்சரிக்கை விமானங்கள் மற்றும் விமான நெரிசல் அமைப்புகள் ஆகிய அதிநவீன ஆயுதங்களை முக்கியமாகக் காட்சிப்படுத்தியது.
ஆனாலும் ஜின்பிங் தனது பேச்சில் அமெரிக்க நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லை. இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்தப் போரின் முடிவிற்கு அமெரிக்கா முக்கியமான பங்காற்றியுள்ளது.
ஜின்பிங் அமெரிக்காவின் பங்களிப்பைக் குறிப்பிடாததை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சீனா விடுதலை பெற, அமெரிக்கா அதற்கு தந்த மிகப்பெரிய அளவிலான ஆதரவையும், அமெரிக்கா சிந்திய ரத்தத்தையும் சீன அதிபர் ஜி ஏன் குறிப்பிடவில்லை ?”என்று பெரிய கேள்வியை எழுப்பியதுடன் அதற்கு சீனா பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
’ஜப்பானியர்களை எதிர்த்து சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகம் சரியாக கௌரவிக்கப்படும், நினைவுகூரப்படும் என்று நான் நம்புகிறேன். சீன அதிபர் ஜி மற்றும் சீனாவின் மக்கள் சிறந்த தினத்தை கொண்டாடட்டும்.
நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராகச் சதி செய்யும் போது, விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார் டிரம்ப்.
இந்தப் பதிவில் கோபமும், மிரட்டலும் இரண்டும் கலந்திருக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம்.
சீன - ரஷ்ய உறவு:
அலாஸ்காவில் கடந்த ஓகஸ்ட் 15-ம் திகதி, அமெரிக்கா சென்றிருந்த புடின் , டிரம்ப் உடனான சந்திப்பு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் ரஷ்யாவிற்கு கிளம்பிவிட்டார்.
ஆனால், சீனாவில் இப்போது புடின் மூன்று நாள்களாக இருக்கிறார்.
அத்துடன் சீனாவில் இந்தியப் பிரதமர் மோடி உடன் அதிக நட்புடன் இருந்தார் புடின். இதேவேளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான அமைதிப் பேச்சுவார்த்தைப் பற்றி இன்னமும் வாயைத் திறக்கவில்லை அவர்.
மோடி - புடின் - ஜின்பிங் முத்தரப்பு:
மோடி, புடின், ஜின்பிங் ஆகிய மூன்று தலைவர்களும் ‘ இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒற்றுமையாக இருக்கின்றன’ என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் வலுவாக தெரிவித்திருந்தனர்.
இவை அனைத்தும் நிச்சயம் டிரம்பிற்கு கடுங் கோபத்தை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். இருப்பினும் அமெரிக்காவின் பெயரை தனது உரையில் ஜின்பிங் குறிப்பிடவில்லை என்பது மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ராணுவ அணிவகுப்பில் மோடி இல்லை!
ஷாங்காய் மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் புடின் இடையே நல்ல நெருக்கம் காணப்பட்டது.
இந்த மாநாட்டின்போது இந்தியப்பிரதமர் மோடி, ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே இருந்த நெருக்கம் அமெரிக்காவிற்கே அச்சத்தை ஏற்படுத்தியது.
ஓகஸ்ட் 31 முதல் செப்ரெம்பர் 1ஆம் வரை நடந்த ஷாங்காய் மாநாட்டில், பத்து உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் தவிர கூட்டணி நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
ஆனாலும் பிரதமர் மோடி இந்த அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.
இரண்டாவது உலகப் போரில் பாசிசத்துக்கு எதிரான சீனாவின் இந்த அணிவகுப்பு ஜப்பானின் ஆதிக்கத்துக்கு எதிரானது. அதனால் இந்த அணிவகுப்பில் பங்கேற்று ஜப்பானுக்கு எந்தச் செய்தியும் சொல்ல இந்தியா விரும்பவில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குதான் இந்தியா எதிரானதே தவிர ஜப்பானுக்கு எதிரானதல்ல என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்த அணிவகுப்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தியப்பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது இருதரப்புடனும் நல்லுறவை பேண முயல்வது தெளிவாகிறது.
ஷாங்காய் உச்சி மாநாடு:
இந்தப் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பின் முன்னராக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் குழுவின்
25வது உச்சி மாநாடு சீன ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் ரஷ்ய -இந்திய - சீன முத்தரப்புக் கூட்டணி உருவானது, அமெரிக்காவிற்கு இது பெருஞ் சவாலாக எழுந்துள்ளது என்றும் விசனிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகும். இதில் தற்போது 26 நாடுகள் அடங்குகின்றன. அதன் மொத்த பொருளாதார உற்பத்தி 30 டிரில்லியன் அமெரிக்க டொலரை நெருங்குகிறது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி நோக்கம்:
ஷாங்காய் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த 24 ஆண்டுகளில் இந்த அமைப்பு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று கூறினார். மாறிவரும் உலகத்தை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து உறுப்பு நாடுகளும் அமைப்பின் இலக்குகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்பாட்டு வங்கியை விரைவில் நிறுவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பரஸ்பர நன்மைகள் மற்றும் பொதுவான சாதனைகள் பொதுவான அடிப்படையில், திறந்த தன்மை மற்றும் பங்கேற்பு, நியாயம் மற்றும் நீதி, நடைமுறைவாதம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.