தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவு தான் தைவான்.
பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா கூறி வருகிறது. இதனை தைவான் ஏற்க மறுக்கிறது.
எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது. நாங்கள் தனி நாடு தான் என தைவான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) பிரிவினைவாத மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இத்தகைய அறிவிப்பால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
அண்மையில், தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், ஜப்பானிய ராணுவம் தலையிடக்கூடும் என்று ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி கூறியிருந்தார். இதற்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
தற்போது சீன ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜப்பானைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.