ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவருக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 45 வயதான டெட்சுயா யாமாகாமி என்பவர் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்குத் தொடர்பாக யாமாகாமியின் வழக்குரைஞர் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வாதிட்டார்.
ஆனால், இந்த கொலையானது, நாட்டில் நடந்த போருக்குப் பிந்தைய வரலாற்றில் இதுவரை நிகழாதது மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய அதிதீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து யாமாகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
67 வயதான முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பின்னால் இருந்து யாமாகாமி என்பவர் அவரை மிக அருகிலிருந்து சுட்டு வீழ்த்தினார்.
ஷின்சோ அவசர சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ரத்த மாற்று உள்பட அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை, ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான டெட்சுயா யாமாகாமியை கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. சம்பவ இடத்திலிருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
அதன்பின்னர் யாமாகாமியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருள்கள், 40 செ.மீ. துப்பாக்கி, கணினி உள்ளிட்டவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
ஜப்பான் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் மிகவும் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.