எகிப்து நாட்டுடனான காசாவின் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
காசாவில் 2023 முதல் நடைபெற்று வந்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையிலான போர் கடந்த 2025 அக்டோபரில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்று இருதரப்பினரும் தாக்குதல்களைக் கைவிட்டனர்.
இந்த நிலையில், போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக எகிப்து உடனான காசாவின் ரஃபா எல்லையை வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 1) முதல் மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் ராணுவத்தின் கோகாட் பிரிவு அறிவித்துள்ளது. இந்தப் பிரிவு, காசாவுக்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரஃபா எல்லையின் வழியாக முறையான சோதனைகளுக்குப் பிறகு மக்கள் செல்வதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து அதிகாரிகள் அனுமதிப்பார்கள் என்றும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போரின்போது வெளியேறிய பாலஸ்தீனர்கள் மீண்டும் காசாவுக்குள் இஸ்ரேலின் அனுமதிப்பெற்றவுடன் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காசாவின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு இஸ்ரேல் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், ஹமாஸ் படைகளிடமிருந்து கடைசி இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.