ஜனவரி 26 ஐ ஆஸ்திரேலியா தனது தேசிய நாளாகப் பிரகடனம் செய்து பெருமையுடன் கொண்டாடும் நாள்.
இந்த நாளில் புதிய குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு, ஜனநாயகம், மனித உரிமைகள், பல்வகைமை, சமத்துவம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு முன்னேற்ற நாடாக ஆஸ்திரேலியா தன்னை உலகுக்கு முன்வைக்கிறது.
அரசியல் தலைவர்களின் உரைகள், தேசியக் கொடியின் கீழ் நடைபெறும் நிகழ்வுகள், பொதுமக்களின் கொண்டாட்டங்கள் — இவை அனைத்தும் அந்த நாட்டின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தும் நிகழ்வுகளாக விளங்குகின்றன.
ஆனால், இந்த ஜனவரி 26 என்னும் திகதியின் உண்மையான வரலாற்றுப் பின்னணியை நாம் நேர்மையாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
1788 ஜனவரி 26 — இங்கிலாந்து ஆக்கிரமிப்புப் படைகள் ஆஸ்திரேலியத் தரையில் முதன்முறையாகக் கால் பதித்த நாள். ஆனால், அந்த நிலம் வெறுமனே கிடந்ததல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக — சுமார் 60,000 ஆண்டுகளுக்கும் மேலாக — பூர்வக்குடியினர் அந்த நிலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றிணைந்ததாகவும், நிலம் அவர்களது சொத்தாக அல்ல, அவர்களது உயிரின் நீட்சியாகவும் கருதப்பட்டதாகும்.
இந்த பூர்வக்குடியினரின் பண்பாடு, மொழி, ஆன்மிக மரபு ஆகியவை உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான மனித நாகரிகங்களில் ஒன்றாக வரலாற்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. ஆனால், ஆக்கிரமிப்பு தொடங்கியபின் நிகழ்ந்தது ஒரு சாதாரண அரசியல் மாற்றமல்ல — அது ஒரு பேரழிவு.
நிலங்கள் அபகரிக்கப்பட்டன. பூர்வக்குடியினர் தங்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். ஆயுதமற்ற மக்களுக்கு எதிராக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். பலர் நோய்களால் உயிரிழந்தனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டனர்.
வரலாற்றில் குறிப்பிடப்படும் Myall Creek massacre போன்ற படுகொலைகள், இந்த ஆக்கிரமிப்பின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துகின்றன. ஒருகாலத்தில் இலட்சக்கணக்கில் இருந்த பூர்வக்குடியினர் எண்ணிக்கை, ஆக்கிரமிப்புக்குப் பின் மிகக் குறுகிய காலத்திலேயே கடுமையாகக் குறைந்தது.
ஆனால், இந்த வரலாற்று அநீதிகளுக்கு முழுமையான நீதி கிடைத்ததா? இந்தக் கேள்வி இன்னும் பதிலின்றியே நிற்கிறது.
இதனால்தான், பல பூர்வக்குடியினரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஜனவரி 26 ஐ “Australia Day” என அல்ல, “Invasion Day” — ஆக்கிரமிப்பு நாள் — எனக் குறிப்பிடுகின்றனர். அது அவர்களுக்கான கொண்டாட்ட நாள் அல்ல; அது அவர்களது இழப்பின் நினைவு நாள்.
இந்த உணர்வை நாம் புரிந்துகொள்ள முடியாதா?
இலங்கையில் மே 18 முள்ளிவாய்க்கல் இனப்படுகொலை தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு ஆழ்ந்த காயத்தின் நாளாகக் கருதப்படுகிறது. அந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன. தமிழ் மக்கள் அந்த நாளை நினைவு நாளாகக் கடைப்பிடிக்கின்றனர்.
அந்த நாளில், யாராவது அதை “வெற்றி நாள்” எனக் கொண்டாடினால் அது எவ்வளவு வலியை ஏற்படுத்தும்?
அதேபோல, ஜனவரி 26 — பூர்வக்குடியினரின் வரலாற்று துயரத்தின் நாளாக இருக்கும் போது — அதை கொண்டாடுவது அவர்களது வரலாற்று வலியை புறக்கணிப்பதாக இல்லையா?
இந்தச் சூழலில், தமிழர் அடையாளத்துடன் செயற்படும் சில தமிழ் அமைப்புகள் ஆஸ்திரேலியா தினத்தை உற்சாகமாகக் கொண்டாடியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் சமூகமே வரலாற்று அநீதியின் வலியை அனுபவித்த சமூகமாகும். இனஅழிப்பு, இடம்பெயர்வு, நினைவுகூரல் — இவை எவ்வளவு ஆழமான உணர்வுகளோ, அதை நாமே அனுபவித்திருக்கிறோம்.
அப்படியான ஒரு சமூகமாக நாம், இன்னொரு இனத்தின் வரலாற்று வலியோடு தொடர்புடைய நாளை கொண்டாடுவது ஒழுக்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுமா?
இது சட்டபூர்வமான கேள்வி அல்ல. இது ஒரு மனசாட்சி சார்ந்த கேள்வி.
ஒரு நாட்டின் குடிமகனாக அந்த நாட்டின் தேசிய நாளை மதிப்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், அதே நேரத்தில் அந்த நாளின் வரலாற்று உண்மையையும், அதன் மறுபக்கத்தில் இருக்கும் மக்களின் வலியையும் புரிந்துகொள்வது நமது மனிதாபிமானப் பொறுப்பு அல்லவா?
வரலாற்றை மறந்து கொண்டாடுவது எளிது.
ஆனால், வரலாற்றை நினைவில் வைத்துக்கொண்டு, நீதியின் பக்கம் நிற்பது தான் உயர்ந்த மனிதநேயத்தின் அடையாளம்.
தமிழர் சமூகமாக நாம் எப்போதும் நீதிக்காக குரல் கொடுத்திருக்கிறோம். அப்படியான நாம், மற்றொரு சமூகத்தின் வரலாற்று நீதிக்கான உணர்வையும் மதிக்க வேண்டிய கடமை கொண்டுள்ளோம்.