ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான ‘தேசிய பாதுகாப்பு உயர்மன்றத்தின்’ (SNSC) புதிய செயலாளராக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தலைமைத் தளபதி முஹ்சின் ரெஸாயி (Mohsen Rezaei) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்பதவியிலிருந்த முஹம்மத் பாகிர் ஜோல்கத்ர் (Mohammad Bagher Zolghadr) விலகியதைத் தொடர்ந்து, உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் (Mojtaba Khamenei) அரசியல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி லாரிஜானி (Ali Larijani) வகித்த பதவியே இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த முஹ்சின் ரெஸாயி?
71 வயதான ரெஸாயி, 1981 முதல் 1997 வரை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைவராகப் பணியாற்றினார்.
1980-களில் நடைபெற்ற ஈரான் - ஈராக் போரின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
பாராளுமன்றத்திற்கும் பாதுகாப்புக் குழுவிற்கும் இடையிலான சட்டத் தகராறுகளைத் தீர்க்கும் இரானின் 'நன்மதிப்பு நிர்ணய மன்றத்தின்' (Expediency Discernment Council) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்திலொரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை இரான் தக்கவைத்துக்கொள்வதில் இவர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றார்.
கடந்த ஜூலை மாதம், "இந்த நீரிணையின் கட்டுப்பாடு என்பது பல டஜன் அணுசக்தி குண்டுகளை விட மதிப்புமிக்கது" என்று தெரிவித்திருந்தார்.
நியமனத்தின் பின்னணியும் முக்கியத்துவமும்: அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) முஹ்சின் ரெஸாயியைச் செயலாளராக நியமித்த அதேவேளை, உச்ச தலைவர் கமேனியும் தனது பிரதிநிதியாக இவரை இக்குழுவில் நியமித்துள்ளார்.
அமெரிக்காவுடனான மோதல் போக்கிற்கு மத்தியிலும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதும், இரானின் ராணுவம், பாதுகாப்பு அமைப்புகள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் அதிபர் அலுவலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஒரு மூத்த தலைவராக ரெஸாயி பார்க்கப்படுகிறார்.
மேலும், இவர் பழமைவாதக் கருத்தியல் கொண்டவராக இருந்தபோதிலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முற்றாக எதிர்க்கும் தீவிரப் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்பதால், இரான் அரசிற்குள் பல்வேறு பிரிவினரிடையேயும் ஒரு சமநிலையை பேணக்கூடிய வாய்ப்பு இவருக்கு உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.