பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் சிறையிலடைக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அடியாலா (Adiala) சிறையிலிருந்த இம்ரான் கான், நள்ளிரவுக்குப் பின்னர் இஸ்லாமாபாத்திலுள்ள 'ஷிபா சர்வதேச மருத்துவமனைக்கு' (Shifa International Hospital) அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் அதாவுல்லா தரார் (Attaullah Tarar) தெரிவித்தார்.
"கண் மருத்துவர், இருதயவியல் நிபுணர் மற்றும் பொது மருத்துவர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவர் உடல்தகுதியுடன் (medically fit) இருப்பதாக உறுதிப்படுத்தினர்" என்று அமைச்சர் அதாவுல்லா தரார் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இம்ரான் கானின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் போது அவரது சகோதரி அஸ்மா கான் (Azma Khan) உடனிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப்' (PTI) கட்சி முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
அதேவேளை, இம்ரான் கான் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையிலேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என அவரது கட்சியும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அரசாங்கம் முழுமையாகப் பின்பற்றும் என்றும், அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாவிடின் அவரை வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்கு அனுப்புவது குறித்துப் பரிசீலிக்கப்படலாம் என்றும் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பில் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட மருத்துவர்களும் பல மாதங்களாக கவலை வெளியிட்டு வந்த நிலையில், அவரை இஸ்லாமாபாத் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சோதனைக்கு உட்படுத்துமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.
நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவரான பைசல் சுல்தான் (Faisal Sultan) ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினால் அவர் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.