காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இதுரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) மாகாணங்களில் புதிதாக 51 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் உதவியைக் கோரி திருத்தந்தை லியோ (Pope Leo) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மே மாத மத்தியில் பரவத் தொடங்கிய இந்த நோய்த் தொற்று, உலக சுகாதார அமைப்பினால் (WHO) சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில், 2014-2016 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000க்கும் அதிகமானோரைக் பலிகொண்ட எபோலா பரவலை விடவும் இது மிக மோசமான நிலையை எட்டும் என அஞ்சப்படுகிறது.
ஜூன் மாதத் தொடக்கத்தில் 20 சதவீதமாக இருந்த மரண விகிதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நோய் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரை சுமார் 160 சுகாதாரப் பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாகாணங்களில் நடைபெற்று வரும் ஆயுத மோதல்கள், மக்களின் இடம்பெயர்வு, சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின்மை போன்றவை நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.
தடுப்பூசிகள் வருகை
தற்போது பரவி வரும் 'பண்டிக்புயோ' (Bundibugyo) எனப்படும் எபோலா வைரஸ் வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இன்னும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், முந்தைய எபோலா பரவல்களில் பயன்பட்ட 'எர்வெபோ' (Ervebo) தடுப்பூசியின் 70,000 அளவுகளை (doses) வழங்க உலக சுகாதார அமைப்பு உறுதியளித்துள்ளது. அதில் முதற்கட்டமாக 16,250 தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை காங்கோவை வந்தடைந்தன.