ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.00 மணியளவில், வட காகசஸ் பிராந்தியத்தின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான மிஷிர்ஜி மலையில் (Mount Mizhirgi) 33 பேர் கொண்ட மலையேற்றக் குழுவினர் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென இந்த பனிச்சரிவு ஏற்பட்டது.
திங்கள்கிழமை காலை 9.00 மணி நிலவரப்படி, பனிச்சரிவில் சிக்கியவர்களில் 10 பேர் சுயமாக மலையிலிருந்து கீழே இறங்கி பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர். இருப்பினும், மேலும் ஆறு பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசர கால மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படுவதற்கான அதிக அபாயம் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.