போர்க்குற்றவாளியான பாஸ்னிய செர்பிய முன்னாள் தளபதி ரட்கோ மிலாடிடிகின் உடல் திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, இனப்படுகொலைக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஒருவரை "மகிமைப்படுத்துவதாக" அமைந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 1990-களில் நடைபெற்ற பாஸ்னியப் போரின் போது இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காகத் தண்டனை அனுபவித்து வந்த 84 வயதான மிலாடிக், கடந்த மாதம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உயிரிழந்தார்.
சர்வதேச ஊடகங்கள் இவரை "பாஸ்னியாவின் கொலையாளி" (Butcher of Bosnia) என்று வர்ணித்திருந்தன.
மிலாடிக்கிற்கு "இராணுவ மற்றும் அரசு மரியாதைகள்" வழங்கப்படும் என்று செர்பிய நீதி அமைச்சர் நெனாத் வுஜிக் ஆரம்பத்தில் அறிவித்தது சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. எனினும், பின்னர் அதிபர் அலெக்சாண்டர் வுசிச் அந்த முடிவை மாற்றியமைத்தார்.
முன்னாள் தளபதியை மகிமைப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அதிபர் வுசிச், இந்த இறுதிச் சடங்கு குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்பவே நடத்தப்படுவதாக விளக்கமளித்தார்.
இறுதி ஊர்வலத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்த மிலாடிக்கின் மகன் தாராகோ, திங்கள்கிழமை அதிகாலை சடங்குகள் தொடங்கும் போது பெட்டகத்தின் அருகே நின்றிருந்தார். தேவாலயத்திற்குள் திரண்ட அஞ்சலியாளர்கள் பலர் பெட்டகத்தை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
அரசு இறுதிச் சடங்குகள் வழக்கமாக நடத்தப்படும் புனித சாவா பேராலயத்திற்குப் பதிலாக, சிறிய புனித லூகா தேவாலயத்திலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது.
இருப்பினும், செர்பிய அமைச்சர்கள் பலர், செர்பியாவுக்கான ரஷ்ய தூதர் மற்றும் பாஸ்னிய செர்பியப் பிராந்தியத்தின் முன்னாள் அதிபர் மிலோராட் டொடிக் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு பாதுகாப்பாக நடைபெறுவதை அரசு உறுதி செய்யும் என்றும், முன் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் காரணமாக தாம் இதில் நேரடியாகக் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அதிபர் வுசிச் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
'தேசிய நாயகன்'
சடலத்தைக் கொண்ட பெட்டகம் பல மணி நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, செர்பிய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவர் தேவாலயத்திற்குள் சிறப்புப் பிரார்த்தனையை நடத்தினார்.
"எங்கள் செர்பிய ஆர்த்தடாக்ஸ் மக்களின் நினைவிலும் பிரார்த்தனைகளிலும் அவரது பெயர் ஆழமாகப் பதிந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். மக்கள் அவர் மீது ஆழந்த நன்றியுணர்வைக் கொண்டுள்ளனர்" என்று தலைமைப் பாதிரியார் போர்பிரிஜே தெரிவித்தார்.
பெட்டகத்தைச் சிப்பாய்கள் வெளியே கொண்டு வந்தபோது, வீதியின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் முன்னாள் தளபதியின் முகம் பொறிக்கப்பட்ட கொடிகளையும், செர்பியா மற்றும் பாஸ்னிய செர்பியக் குடியரசின் தேசியக் கொடிகளையும் அசைத்து அஞ்சலி செலுத்தினர்.
மிலாடிக்கின் பெட்டகம் மெதுவாக தோப்சிடர் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலியாளர்களின் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
மிலாடிக்கின் மறைவைத் தொடர்ந்து பெல்கிரேடில் நடந்த நிகழ்வுகள், பிராந்திய மற்றும் சர்வதேச தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனத்தைப் பெற்றுள்ளன.