மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் பாதையை (Oil Pipeline) தற்காலிகமாக மூடியுள்ளது.
சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதை மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஈரான் எல்லையை ஒட்டியுள்ள தனது மாகாணம் ஒன்றில் இருந்துதான் தொடங்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட ஈராக், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, அப்பாந்தியத்தின் ராணுவத் தளபதியையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, பதற்றம் நிறைந்த ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) தவிர்த்து எண்ணெய் விநியோகம் செய்ய இந்த 1,200 கி.மீ (745 மைல்) நீளமுள்ள குழாய் பாதையே பெரிதும் உதவியாக இருந்தது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் 7-வது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தீவிர தாக்குதல்கள் உலகளாவிய கடல்சார் எண்ணெய் விநியோகப் பாதைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகே புகை மூட்டமும், நிலம் கருகியிருப்பதும் செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த எண்ணெய் குழாய் பாதை மூடப்பட்டதாக வெள்ளிக்கிழமை ரியாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சேதத்தின் அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் சவூதியின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கப்பல் கண்காணிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% முதல் 5% வரை இந்த குழாய் பாதை மூலமே கொண்டு செல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஈராக் பிரதமரின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, இந்த கட்டத்தில் சவூதி அரேபியா உடனடிப் பதிலடித் தாக்குதலைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈராக் மண்ணில் இருந்து அண்டை நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுப்பதற்காக ஈராக் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு சவூதி அரேபிய அரசு ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயின் நுழைவாயிலான பாப் அல்-மந்தப் (Bab al-Mandab) ஜலசந்தியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள ஹவுதி அமைப்பு, "சவூதி அரேபியக் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் கடல்சார் போக்குவரத்தும் பாதுகாப்பாக இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.