தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ஆதரவற்ற பூனைக்குட்டி ஒன்று தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 10 ஆண்டுகாலத் தீவிர ஆய்வின் முடிவில், முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் முறைப்படி அடையாளப்படுத்தியுள்ளனர்.
'லியோபார்ட்ஸ் தில்காயோ' (Leopardus tilcayo) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இனம், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் உலகினால் புதிதாகக் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்ட முதல் காட்டுப்பூனை இனமாகும்.
இதற்கு முன்னர் 1923 ஆம் ஆண்டு 'பாம்பாஸ் பூனை' (pampas cat) கண்டறியப்பட்டதே இறுதியானதாகும்.
ஆண்டிஸ் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 'யுங்காஸ்' (Yungas) மேகக் காடுகளில் (Cloud Forest) வாழும் உள்ளூர் மக்கள், இந்த பூனையை "தில்காயோ" என்று அழைத்து வந்தனர்.
அவர்களின் மரபு சார்ந்த அறிவைக் கௌரவிக்கும் வகையில், அதே பெயரை இதன் அறிவியல் பெயராக விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.
கண்டுபிடிப்பின் பின்னணி
கடந்த 2016 ஆம் ஆண்டு காட்டுப்பகுதிக்கு அருகே தனியாகக் கிடந்த ஒரு சிறிய பூனைக்குட்டியை, சாதாரண வீட்டுப் பூனைக்குட்டி என நினைத்து உள்ளூர்வாசி ஒருவர் எடுத்து வளர்த்து வந்தார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு அதன் காட்டுப் பண்புகள் வெளிப்படத் தொடங்கியதும், கோழிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளது.
அதனை பராமரிக்க முடியாத குடும்பத்தினர், 'செண்டா வெர்டே' (Senda Verde) வனவிலங்கு சரணாலயத்திடம் ஒப்படைத்தனர்.
அங்கிருந்த விசித்திரமான பூனையைப் பார்த்த பொலிவிய காட்டுப்பூனை ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னணி விஞ்ஞானி பாவோலா நோகலெஸ் அசகாரன்ஸ், அதன் சிறிய உருண்டையான காதுகள், நீளமான மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற புள்ளிகளைக் கண்டு சந்தேகமடைந்தார்.
10 ஆண்டுகால மரபணு ஆராய்ச்சி
தொடக்கத்தில் இது வழக்கமான 'டைகிரினா' (Leopardus tigrinus) பூனை என நம்பப்பட்டாலும், இதன் புள்ளிகளின் வடிவத்திலும் அளவிலும் மாறுபாடுகள் இருந்தன.
இதனைத் தொடர்ந்து, மூன்று நாடுகளைச் சேர்ந்த மரபியல் வல்லுநர்களின் கூட்டமைப்பு மற்றும் நூறாண்டு பழமையான அருங்காட்சியக மண்டையோடுகளின் DNA மாதிரிகளைக் கொண்டு சுமார் 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் முடிவிலேயே, இது முற்றிலும் புதிய இனம் என்பது உறுதியானது.
'கரண்ட் பயாலஜி' (Current Biology) அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, பல்லுயிர் பெருக்கத்தில் இன்னும் அறியப்படாத பல அதிசயங்கள் நிறைந்துள்ளன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.