கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடகப் பதிவில் இது குறித்து எழுதியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி எதிரி நாடுகள் எதுவும் இந்தத் தீவில் முக்கியமான அல்லது உணர்திறன் வாய்ந்த முதலீடுகளைச் செய்ய முடியாது என்றும், இந்த ஒப்பந்தத்திற்குக் காலாவதி திகதி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"எனது வழிகாட்டுதலின் கீழ், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் கிரீன்லாந்தில் செய்வதற்கு, அமெரிக்காவிற்கு என்றென்றும் முழுமையான அதிகாரம் இருப்பதை உறுதி செய்ய டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றினோம்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், கிரீன்லாந்தை அமெரிக்காவிற்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற டிரம்பின் நீண்டகாலக் கனவை விட இது சற்று மாறுபட்ட ஒன்றாகும்.
1951 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம், கிரீன்லாந்தில் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கும் இராணுவத் தளங்களை அமைப்பதற்குமான முழுமையான உரிமைகளை அமெரிக்கா ஏற்கனவே கொண்டுள்ளது.
கிரீன்லாந்தின் தொலைதூர வடமேற்குப் பகுதியில் ஏற்கனவே அமெரிக்க விண்வெளிப் படையின் (Space Force) தளம் ஒன்று அமைந்துள்ள நிலையில், விரைவில் அந்தத் தீவில் பெரிய அளவிலான இராணுவப் பிரசன்னத்தை அமெரிக்கா மேற்கொள்ளும் என அவர் விரிவான விவரங்கள் இன்றி தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் இந்த ஒப்பந்தம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அந்தத் தீவின் மக்கள் சுதந்திரத்தை விரும்புவதுடன், தங்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
தனி அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த ஒப்பந்தம் தீவு தொடர்பான வாஷிங்டனின் தேசிய பாதுகாப்பு கவலைகளை "நிரந்தரமாகவும் முழுமையாகவும்" தீர்த்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.