குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது அனைத்துலக காவல்துறை (INTERPOL) நீல அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள- வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் பிற தேடப்படும் நபர்களைக் கண்டறிய, சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சட்ட அமுலாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது.
பசில் ராஜபக்ச தற்போது இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார், அவர் பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.
மாத்தறையில், 1.5 ஏக்கர் நிலத்தை ர60 மில்லியன் ரூபாவுக்கு வாங்கியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் நீதிமன்றம் ஜூலை மாதம் அவருக்கு எதிராக மீண்டும் ஒரு பிடியாணையை பிறப்பித்தது.
பசில் ராஜபக்ச தொடர்பாக ஏற்கனவே ஒரு நீல அறிவிப்பு (Blue Notice) வெளியிடப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தப்பட்ட குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெற சர்வதேச சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு வழிவகுக்கும் .
சர்வதேச காவல்துறையின் நீல அறிவிப்பு என்பது, ஒரு குற்றவியல் விசாரணை தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் ஒரு சர்வதேச எச்சரிக்கையாகும்.
ஒரு சந்தேக நபரின் சரியான வெளிநாட்டு முகவரி அல்லது வசிக்கும் நாடு தெரியவரும்போது நீல அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அது அந்த நபர் தனது சொந்த நாட்டிற்குத் தேவைப்படுகிறார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகச் இருக்கும்.
இதற்கு மாறாக, எங்கு இருக்கிறார் என்பது முற்றிலும் தெரியாத தப்பியோடியவர்களுக்காக சிவப்பு அறிவிப்பு கோரப்படுகிறது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.