இந்தியா ஜார்க்கண்ட் மாநிலம் - ராஞ்சியில் உள்ள மதுக்கடை ஒன்றுக்குள் நுழைந்த பெண் குரங்கு ஒன்று, அங்கிருந்த மதுபானத்தை அருந்திவிட்டு கடையின் உள்ளேயே தூங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியின் ஓர்மாஞ்சி பகுதியில் உள்ள பிளாக் சௌக் (Block Chowk) அருகே இயங்கி வரும் மதுக்கடை ஒன்றிற்குள் இந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திடீரென கடைக்குள் புகுந்த அந்தப் பெண் குரங்கு, அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளது.
கடையில் வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில் ஒன்றை எடுத்த குரங்கு, அதில் இருந்த மதுவை அருந்தியுள்ளது. மது அருந்திய சிறிது நேரத்திலேயே போதை தலைக்கேறியதால் தளர்வடைந்த அந்த குரங்கு, கடைக்குள்ளேயே படுத்து உறங்கத் தொடங்கியுள்ளது.
இந்த விசித்திரமான சம்பவம் குறித்த செய்தி காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, பொதுமக்கள் அங்கு வேடிக்கை பார்க்கக் கூடினர். உடனடியாக இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், குரங்கிற்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் அதை மிகவும் கவனமாகப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.
மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்திய குரங்கின் இந்த விசித்திரமான செயல், அப்பகுதி மக்களிடையே தற்போதைய சுவாரஸ்யமான பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.