ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாகவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பதாகவும் தான் உறுதியளித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மறுத்துள்ளார்.
"இது முற்றிலும் உண்மையற்றது. நான் அவர்களுக்கு எதையும் வழங்க முன்வரவில்லை" என்று 'ஆக்ஸியோஸ்' (Axios) செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த உறுதியான நடவடிக்கைகளுக்கு ஈடாகத் தடைகளைத் தளர்த்தவும், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவிக்கவும் டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆக்ஸியோஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில் அமெரிக்க அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல், அணுசக்தி விவகாரத்தில் ஈரான் "உறுதியான முன்னேற்றத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிக்கவும் டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சி.என்.என் (CNN) செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதும், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது டெஹ்ரான் தாக்குதல் நடத்தியதுமாகத் தொடங்கிய ஈரான் போருக்கான தனது இலக்குகளையும் காலக்கெடுவையும் டிரம்ப் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஏழு மாதங்களாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் திங்கள்கிழமை மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் அணுசக்தித் திறனைக் பலவீனப்படுத்துவது தனது போரின் முக்கிய இலக்குகளில் ஒன்று என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணுஆயுதங்கள் எதுவும் கைவசம் இல்லாத ஈரான், தான் அணுஆயுதங்களைத் தயாரிக்க முயலவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேவேளையில் அமெரிக்கா அணுஆயுதங்களைக் கொண்ட ஒரு நாடாகும்.
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்ற முறையில், அமைதி நோக்கங்களுக்காக அணுசக்தித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தனக்கு உரிமை உண்டு என்று தெஹ்ரான் தெரிவித்து வருகிறது.