ஜெயிலர் - கில்லர் ( தமிழ் சினிமாவிற்கும் , ரசிகர்களுக்கும் )
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான முத்து (Muthu) திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.இப்படத்தில் ரஜினிகாந்த் தனது தந்தையிடம் பேசும் காட்சியில் இந்த உருக்கமான வசனம் வரும்: "அப்பா... ஏமாத்துறவனை விட ஏமாறறவன்தான் குற்றவாளின்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்க. நான் ஏமாந்துட்டேன்பா... இப்ப உங்க முன்னால குற்றவாளியா நிக்கிறேன்!" . இந்த படம் பார்த்து ஏமாந்தவன் நான் .ஆதலால் இது ஒரு குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்.
1995 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் வெளியாகியது. அந்த படத்திற்கு எனது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த நாள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. அப்பொழுது குமுதம் இதழில் வெளியாகிய அந்தப் படத்தின் திரை விமர்சனத்தில் இவ்வாறு எழுதியிருந்தனர். அதாவது இந்த படத்தில் "ரஜினி இருக்கிறார் ,ரஜினி மட்டும் இருக்கிறார் . ரஜினி மட்டுமே இருக்கிறார்" என்று . இப்பொழுது 2026 க்கு வரலாம். 31 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ஜெயிலர்-2 படத்தை பற்றி என்னை எழுதச் சொன்னால் இப்படித் தான் எழுதுவேன் .அதாவது " ரஜினியைத் தவிர எல்லோரும் இருக்கின்றனர் " என்று. ஏன் சொல்கிறேனென்றால் பாட்ஷா ரஜினி இன்று இல்லை. என்றும் இருக்க முடியாது. அப்பொழுது அவருக்கு போட்டியே கிடையாது. இப்பொழுது அவரது எதிரி அவர் மட்டுமே.
பலவித தடங்கல்களைக் கடந்து ஜெயிலர்-2 படம் பார்த்து முடித்தேன். நான் தடங்கல்கள் என்று சொல்லியது எனது தூக்கத்தை சொல்கிறேன். கூலி படம் அளவுக்கு மோசம் இல்லையென்றாலும் , என்னளவில் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன்.இந்தப் படத்தின் கதை என்ன என்பதை பற்றியெல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தப் போவதில்லை . ஏனென்றால் அப்படி ஒன்று இருந்தால் தானே சொல்வதற்கு .
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தில் தனது மகனையும், வில்லன் கூட்டத்தையும் கொல்கிறார் இல்லையா. இரண்டாம் பாகத்தில் தலைமறைவாக இன்னொரு ஊரில் மனைவி, பேரன் மற்றும் குடும்பத்துடன் வசிக்கிறார். பிறகு வழக்கம் போல் ஒரு சாதா வில்லனுடன் மோதல் ,பிறகு இன்னொரு வில்லனுடன் மோதல் ,பிறகு அந்த வில்லனின் தலைவனான இன்னொரு வில்லன் குடும்பத்துடன் மோதல். வில்லன்கள் ஒவ்வொருவராக தேடிவந்து அவரிடம் செத்துப் போகின்றனர் . இதுதான் கதை.
வில்லன்கள் அனைவரும் மூளை என்றால் கிலோ என்ன என்றும் கேட்பதோடு நாமும் அவ்வாறே இருக்க வேண்டும் நெல்சன் நினைத்திருக்கிறார் . அதாவது முதல் பாகத்தில் ஜெயிலர் ரஜினி கொலை செய்த வர்மன் ( விநாயகன் ) கொன்றது யார் என்று ஊரெல்லாம் வில்லன்கள் தேடுகின்றனர் . ஐயோ அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எந்த வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத ஊரில் வசிக்கின்றனர் . ஒரு CCTV ,மொபைல் network tracing என்று எதுவுமே இல்லாமல் ஒவ்வொரு ஊருக்காக சென்று யாரையாவது கொலை செய்து கொண்டே போகின்றனர். அதாவது ஒரு துப்பு கிடைத்தால் ஒரு கொலை என்று குறைந்தது 20+ பேர்களையாவது கொன்றிருப்பார்கள்.படத்தில் எத்தனை கொலைகள் நடந்தது என்று யாரவது சரியாக சொன்னால் அவர்களுக்கு கலாநிதி மாறன் ஒரு விலையுயர்ந்த காரினை பரிசாக கொடுப்பார் என்று போட்டி வைக்கலாம் . அத்தனை தலைகள் மன்னிக்கவும் அத்தனை கொலைகள்.
என்னை எரிச்சலாக்கிய இன்னொரு விஷயம். ரஜினி தான் வயசானவர் அவரால் ஓடவோ ,சண்டை போடவோ முடியாது. ஆதலால் அவர் எப்பொழுது பார்த்தாலும் நடக்கிறார். அதற்காக எல்லோரையும் ஸ்லோ மோஷனில் நடக்க வைக்க வேண்டுமா ? .ஆண்டவா ! அனைவரும் நடந்து கொண்டே இருக்கின்றனர். இந்த படத்தில் அனைவரும் மெதுவாக நடந்து வரும் காட்சிகளை நீக்கி விட்டால் மொத்த படமே 1 மணி நேரத்தில் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்இது போதாது என்று இந்த அனிருத் வேறு கத்திக்கொண்டே இருக்கிறார். இந்த கத்தல் இசைக்காக எதற்காக 4 மணிக்கு எழுந்து இசை அமைத்தார் என்றே தெரியவில்லை . தலைவரு நிரந்தரம் என்றே கூவிக்கொண்டு இருக்கிறார் . எனக்கே நிரந்தர தலைவலி வந்து விட்டது. கஷ்ட காலம்
இந்த படத்தில் நடப்பவை எல்லாம் எந்த ஊரில் நடக்கிறது என்றே தெரியவில்லை . அந்த ஊரில் போலீஸ் என்பது ரஜினி சொல்வதை மட்டும் கேட்கும் சிரிப்பு போலீசாகவே இருக்கின்றனர். ரஜினி ஒரு Pan india நடிகர் என்பதால் எல்லோ ஊரிலிருந்தும் லாரி லாரியாக நடிகர்கள் நடித்து மன்னிக்கவும் வந்துகொண்டே இருக்கின்றனர் . இது தமிழ் படம் என்பதை விட பன்மொழி படம் என்றே சொல்ல வேண்டும் . தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி எந்த எல்லா மொழிகளிலும் பேசுகின்றனர் . இனி அடுத்த படத்தில் மிச்சமுள்ள இந்திய மொழிகளான வங்காளம் ,ஒரியா ,மராத்தி ,போஜ்பூரி மொழிகளில் நடிக்கும் நடிகர்களை சேர்த்துக்கொண்டால் ஒரு மினி பாரத விலாஸ் ஆவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது . நமது தேசிய ஒற்றுமைக்கு இந்த படம் ஒரு சாட்சி.
என்னால் கொஞ்சம் கூட சகிக்க முடியாத விஷயம் என்னவென்றால் இதில் வரும் காமெடி வசனங்கள் தான். தியேட்டர் சிரிக்கிறது . என்னால் எதற்கும் சிரிக்கவே முடியவில்லை. ஒருவேளை நான் தான் பூமர் அங்கிள் ஆகிவிட்டேன் என்பதால் இப்படியா என்று தெரியவில்லை . முடியவில்லை . இன்னும் எத்தனை நாளைக்கு தான் யோகி பாபு இதே பாணியை கடை பிடிப்பார் என்று தெரியவில்லை . பரிதாபம் . chatgpt ,Gemini ,Claude LLM மாடல்களைக் கேட்டால் இதை விட மிக நல்ல கதையும், திரைக்கதையும் கொடுத்திருக்குமே ஐயா . ஏன் எங்களை கைவிட்டீர்கள்.
ரஜினி அவர்கள் இத்தனை நாள் பீடி சிகரெட் போன்ற வஸ்துகளை திரைப்படங்களில் ஸ்டைலாக பிடித்து தன் ரசிகர்களை இந்த வஸ்துக்களுக்கு அடிமையாக்கினார் என்று குற்றச்சாட்டு இருக்கிறது அல்லவா. இந்த படத்தில் ஆன்டி(Aunty ) பிரியர் ஆகி விட்டார். அவர் வித்யா பாலனை பார்த்து ஜொள்ளு விடுவது மிக கீழ்த்தரமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு 40/50/60 வயது தாண்டிய ரசிக கண்மணிகள் ஜொள்ளு விட கிளம்பிவிடும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. தலைவரே உங்களுக்கு இந்த நிலைமை தேவையில்லை.
படத்தில் எதாவது நன்றாக இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால். எதுவுமே இல்லை என்று தான் சொல்வேன். என்னால் ஒரு காட்சியிலும் ஒன்ற முடியவில்லை. இதுவரை மாபெரும் வெற்றி பெற்ற ரஜினியின் அத்தனை படங்களிலும் வில்லன் பாத்திரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். மார்க் ஆண்டனி , நீலாம்பரி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் வரும் வில்லன் குடும்பத்தை பார்த்தால் மிகக் கொடுமையாக இருக்கிறது. எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு எரிச்சல் ஏற்படுத்துகிறது. அவர்களின் குடும்ப பெயர் கல்பக் , அவர்களின் செயல்களை பார்க்கும்போது மொத்த குடும்பமும் கீழ்பாக்கத்திலிருந்து வந்திருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது. இந்த படத்தில் ஒரே ஒரு ஆறுதல் மிதுன் சக்ரவர்த்தி .எந்த கோமாளித்தனமும் செய்யாமல் அமைதியாக சக்கரவண்டியில் இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம். இருவரின் வயதும் 76. படத்தின் இறுதிக் சண்டைக்காட்சியில் ரஜினியால் பாய்ந்து பாய்ந்து சண்டை போட முடியாதென்பதால் நான்கு பெண்கள் tomb raider video கேமில் வருவது போன்று உடையணிந்து கொன்று தள்ளுகின்றனர். அப்பாடா ,எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று பார்த்தால் இதில் மூன்றாவது பாகத்திற்கு நீடிப்பதாக படத்தை முடிக்கிறார்கள். தலைவரே போதும்.
" பிள்ளை இல்லாத ஊரில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்" என்றொரு சொலவடை எங்கள் ஊரில் சொல்வார்கள். நேற்று நான் படம் பார்த்த தியேட்டரில் துள்ளி விளையாண்டவர்கள் ஏறக்குறைய கிழவர்கள். இந்த படத்தின் மூலம் அவர்களால் தங்கள் பால்ய காலத்திற்கு போக முடிகிறது. எனக்கும் கூட அந்த பதின்பருவத்திற்கு போகலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் நெல்சன் மற்றும் அவர்களின் உதவி இயக்குனர்கள் அனைவரும் சேர்ந்து கந்தரகோலம் செய்து நம்மை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர்.
எனக்கு மிகவும் பிடித்த சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது " ஏழைங்க தப்பு பண்ணா அது தண்டனை... அதே தப்ப பணக்காரன் பண்ணா அது பிசினஸ் ஸ்டிரேட்டஜி (Business Strategy)!" இதை எதுக்காக சொல்கிறேனென்றால் அதுக்கு தான்.