உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை (Jensen Huang) பதவியிலிருந்து நீக்குவதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு தயாராகி வருவதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
ஜென்சன் ஹுவாங் தொடர்பான தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை தொடர்பான சந்தேகங்கள் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வயதான ஹுவாங், தனது மனைவிக்கு துரோகம் இழைத்ததாகவும், இரண்டு திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் ஒன்று, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தின் நிர்வாகியான அலிஸ் ஹுவாங்குடனான தொடர்பு எனக் கூறப்படுகிறது. குறித்த பெண் சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய தொடர்பு, என்விடியாவின் சுகாதாரப் பிரிவின் மூத்த நிர்வாகியான கிம்பர்லி பவலுடன் (Kimberly Powell) இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தனது குடும்பத்தினருக்கும் நிறுவன ஊழியர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் இழைத்தமைக்காக வருத்தம் தெரிவித்து, ஜென்சன் ஹுவாங் நிறுவன ஊழியர்களுக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் என்விடியாவின் நிர்வாகக் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், ஹுவாங்கின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதற்காகக் கூட்டமொன்றையும் நடத்தத் தயாராகியுள்ளது.
இதனால், நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்துக்குப் பின்னர் என்விடியாவின் பங்குகள் சுமார் 8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
1993ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை இணைந்து ஆரம்பித்த ஜென்சன் ஹுவாங், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். அவர் பதவி விலகும் பட்சத்தில், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தெளிவான வாரிசு இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் என்விடியா நிறுவனத்திடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.