சேதுபதியும் சேறடி சேனாபதிகளும்

Articles 3 ஆண்டுகள் முன்

banner

முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்படாது என்று தொடங்கப்பட்ட புறக்கணிப்பு போராட்டம் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்த்தேசிய தரப்பினரால் சேறடிப்பு போராட்டமாக – சுய இருப்பிற்கு குழிதோண்டுவதாக – ஏனைய தரப்பின் எரிச்சலை அறுவடை செய்வதாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.





மொத்தத்தில், புறக்கணிப்பு போராட்டம் என்பதன் தாற்பரியம் குறித்து அறிவுபூர்வமாக தமக்கு எதுவும் தெரியாது என்பதை இந்தப்போராட்டக்காரர்கள் இரவு – பகலாக குஸ்திபோட்டு கூவிக்கொண்டிருக்கிறார்கள்.





புறக்கணிப்பு போராட்டங்கள் எனப்படுகின்ற வேர்ச்சுவல் சீற்றத்துக்கான ஆயுள் இப்போதெல்லாம் அண்ணளவாக ஒருவாரம். மிஞ்சி மிஞ்சிப்போனால் இரண்டு வாரங்கள். அவ்வளவுதான். ஒரு கோவில் திருவிழாபோல என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப்போராட்டங்களுக்கான ஆயுளும் அடர்த்தியும் அவ்வளவுதான். ஆனால், இப்படிப்பட்ட போராட்டங்களை மையத்தை நோக்கி எவ்வளவு கூர்மையாக பேணுகிறோம் என்பதில்தான் போராட்டத்தின் வெற்றி - தோல்விகள் தங்கியிருக்கின்றன.





வுpஜய் சேதுபதி விடயத்தில் அரிவாள் வீசிக்கொண்டிருப்பவர்களிடம் இதுபற்றி பேசிப்பயனில்லை.





ஓன்று இவர்களில் பலர், விஜய் சேதுபதி விடயத்தை தூக்கியாடுவதன் மூலம் தங்களின் தேசிய உணர்ச்சிகளை இலவசமாக விளம்பரப்படுத்த முண்டியடிக்கிறார்கள்.





இன்னொரு தரப்பினர், உண்மையிலேயே இந்த '800' படத்தை நிறுத்துவதன் மூலம் முரளிதரனின் ஊடாக மகிந்த தரப்புக்கு பாடம் கற்பித்துவிடலாம் என்று பற்களை நறுநறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.





இன்று உலகெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது கோப்ரேட் அரசியல். அமித்ஷா முதல் பசில் ராஜபக்ஷ வரைக்கும் அரசியலில் 'டீல்' என்றால் என்ன என்று வியாழேந்திரனையும் வாங்கி காட்டிவிட்டார்கள். குஷ்புவையும் வாங்கி காட்டிவிட்டார்கள். பாமர மக்களுக்கே புரிந்த அரசியல் பால பாடம் இது.





ஆனால், இந்த கொடிபிடி அடிபிடிகள்மாத்திரம் இன்னமும் இந்த உண்மையை உணராமல் வாழ்ந்துகொண்டிருப்பதுதான், முரளிதரன் நிலைநாட்டிய உலக சாதனைகளைவிட மிகப்பெரிய சாதனை.





அப்படியானால், விஜய் சேதுபதி விடயத்தில் நடைபெற்றிருக்கவேண்டியது என்ன?





இனப்படுகொலை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் - புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தவேண்டும் - என்பதெல்லாம் ஈழத்தமிழன் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமை. இவை பல காலமாக நடைபெற்றுவருகின்ற விடயங்கள். சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு எதிரான போராட்டம், சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான போராட்டம், டில்மா தேயிலைக்கு எதிரான போராட்டம் என்று எத்தனையோ போராட்டங்கள் கடந்தகாலங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன.





அந்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதெல்லாம், போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் துயரம் மிக அடர்த்தியாக உலகின் காதுகளில் உரக்கக்கூறப்பட்டதே தவிர, குறுக்கே கொடியோடு போய் நின்றுவிட்டால், புறப்பதற்கு ஆயத்தமாக நின்ற சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் எழும்பாமல் நின்றுவிடும் என்று அர்த்தத்தில் சன்னதம் ஆடவில்லை.





விஜய் சேதுபதிக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் அந்த அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவேண்டும்.





போர் முடிவடைந்த பிறகு, போரை நடத்திய ஒரு தளபதியை ஆதரித்து வாக்களித்த தமிழ் மக்கள், 'நான் முதலில் சிறிலங்கன், அதன்பிறகுதான் தமிழன்' – என்று கூறுகின்ற முரளிதரனை - தார்மீகமாகப்பார்த்தால் - கேள்விக்கு உட்படுத்தமுடியாது. கூடவே, அது அவரது அரசியல் நிலைப்பாடு என்றால் அதனை விமர்சனத்துக்கும் உட்படுத்தமுடியாது.





அவரது அதே கொள்கையை உடைய தேசியக்கட்சியொன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட அங்கஜனைத்தான் தமிழ் மக்கள் இன்று ஏகோபித்த வாக்குகளுடன் தங்கள் பிரிதிநிதியாக தெரிவுசெய்திருக்கிறார்கள்.





ஆக, முரளிதரனின் அரசியலை கேள்விக்கு உட்படுத்துவதாக கொடியை தூக்கிக்கொண்டுபோனால், அந்த வாதம் செய்தவர்கள் குழியில் விழுவதைத்தவிர வேறு வழியில்லை.





ஆனால், காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முரளிதரன் கொச்சைப்படுத்தும் விதமாக தெரிவித்த கருத்துக்களையும் -





போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களது வலியை கிஞ்சித்தும் உணராதவராக 'மருந்து தருகிறேன்' என்ற போக்கில் பேசுகின்ற விடயங்களையும் தர்க்கபூர்வமாக முன்னிலைப்படுத்தி அவரை கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும்.





அவரது இந்த முட்டாள்தனமான கருத்துக்காக கோத்தாவின் அரசியல் முகாமை அவர் தெரிவுசெய்திருக்கும் கபடத்தையும் தோலுரித்து காண்பித்திருக்கவேண்டும்.





இந்தப்பாதையின் வழியாக தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை முன்னிலைப்படுத்தியிருக்கவேண்டும்.





இந்த அணுகுமுறையில் மேற்படி புறக்கணிப்புப்போராட்டம் இடம்பெற்றிருக்குமேயானால், '800' படத்தை தமிழ் மக்கள் தமக்கான பிரச்சார கருவியாக உபயோகித்து, தங்களின் கருத்துக்களை எடுத்துச்செல்வதற்கு பயன்படுத்தியதாக அமைந்திருக்கும்.





போராட்டங்கள் அப்படித்தான் அமையப்பெறவேண்டும். அதாவது, போராட்டத்துக்கான நியாயங்கள் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். அது தீர்க்கப்படும்வரைக்கு எந்தக்காலத்திலும், கேட்பவர்களிடம் துயரம் குறையாமல் எடுத்துக்கொடுக்குமளவுக்கு அடர்த்தியோடு பேணப்படவேண்டும்.





இன்று இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி வரலாம், நாளை இன்னொருவர் வரலாம். ஆக, தனிமனிதர்களை இலக்குவைத்து சேறடிப்புக்களை நிகழ்த்துவதில் எந்தப்பயனும் இல்லை. போராட்ட நியாயங்களை முன்னிலைப்படுத்தி, அவற்றை இப்படியான காலப்பகுதியில் முன்னகர்த்தியிருக்கவேண்டும்.





ஆனால், நடைபெற்றது என்ன?





கவிஞர் தாமரை போன்ற கூழ்முட்டைகள் என்ன செய்தன?





'முரளிதரன் நீயொரு வரலாற்று எச்சில்' – என்று பதிவு எழுதி சமூகவலைத்தள சங்கிகளை உசுப்பேற்றிவிட, இரவு – பகலாக கூவிக்கொண்டு திரிந்த அந்தக் கூட்டங்களும் அதைத் தூக்கிக்கொண்டு, விஜய் சேதுபதியை எதிர்ப்பதன் மூலம் - முரளிதரனை தூற்றுவதன் மூலம் - தங்களுக்கும் தங்களது போராட்டத்துக்கும் முகவரிகளை சூடிக்கொள்வதற்கு திமிறிக்கொண்டன.





இந்தப்படத்தை நிறுத்தினால் ஈழம் கிடைத்துவிடும் என்பதுபோல ஒரு பழிவாங்கும் படலமாக இந்தப் போராட்டத்தை முன்னிறுத்தினார்கள்.





திருமாவளவன் கூறுவதைப்போல – பகைவனை ஜனநாயகப்படுத்துகின்ற போராட்டங்கள்தான் எப்போதும் நிரந்தர தீர்வுகளை தருமே தவிர, பழிவாங்கும் போராட்டங்களும் அச்சுறுத்தும் போராட்டங்களும் ஒருபோதும் நிரந்தர தீர்வை தராது. அது குறுகிய கால குதூகலங்களை தரலாம். ஒரு நாள் நித்திரைக்கான மாத்திரையாக அது அமையலாம்.





ஆக, இதிலிருந்து எங்கு நகரப்போகிறோம் என்பதை இனியாவது தீர்மானிக்கவேண்டும்.





விஜய் சேதுபதியின் மகளை வன்புணரவேண்டும் என்ற குழறியவனின் குரலுக்கு இந்த ஒட்டுமொத்த போராட்டக்காரர்களும் பொறுப்பேற்கவேண்டியவர்களாக உள்ளார்கள் என்ற உண்மையாவது கொஞ்சம் உணரவேண்டும்.