'டரம்புக்கு ஆப்பு வைத்து டுவிட்டர், பேஸ்புக்'

banner

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தின் எதிரொலியாக வன்முறையை தடுக்க டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணிநேரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.





அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20 ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.





ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.





தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.





ஆனால், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.





சான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்து வருகின்றன. இதற்காக உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், கேபிடால் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.





அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். கலைய மறுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது.





இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டுள்ளார்.





தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நேற்று மதியம் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்புடன் உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.





இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் அதனை கட்டுப்படுத்துவதற்காக டிரம்பின் 3 பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டு உள்ளது.





இதேபோன்று, குடிமக்கள் ஒற்றுமை அல்லது வன்முறை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்புடைய டுவிட்டரின் கொள்கை விதிகளை மீறும் வகையிலான செயல்கள் வருங்காலத்தில் நடைபெற்றால், டொனால்டு டிரம்பின் கணக்கு நிரந்தரம் ஆக முடக்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்து உள்ளது.





பேஸ்புக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய வீடியோவை நீக்கியுள்ளது.





இதுபற்றி பேஸ்புக் நிறுவன ஒருமைப்பாடு துணை தலைவர் கை ரோசன் கூறும்பொழுது, வீடியோவை நாங்கள் நீக்கியுள்ளோம். ஏனெனில், அது நடந்து வரும் கலகங்களை மறைப்பதற்காக அல்ல. ஓரளவு வன்முறை கட்டுக்குள் வருவதற்கான சமநிலையை அது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்து உள்ளார்.