மக்கள் தொகை கணக்கெடுப்பும் - தமிழ் மொழி கல்வியின் நிலையும்

banner

ஆஸ்ரேலியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஓகஸ்ட் மாதம் 10 ஆம்  திகதி நடைபெற இருக்கிறது.  தமிழர்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாம் யாவரும் எம்மைத் தமிழராகவும், வீட்டில் தமிழ் பேசுவோராகவும் பதிவசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள் பலராலும் உற்சாகத்துடன் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதால் தமிழர் சமூகத்திற்குப் பல நன்மைகள் விளையும் என்பது உண்மையாகும். எனவே, இதனை நாமும் முழுமையாக ஆதரிக்கிறோம்.





அதேவேளை, இது வெறுமனே பத்திரத்தைப் பூர்த்தி செய்து, உணர்ச்சியைக் காட்டிவிட்டு ஒய்ந்து போகும் ஒரு செயலாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். 'தமிழர்' என்ற வகையில், எமது மொழிக்கும் சமூகத்துக்குமான எமது பொறுப்புகளை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறோம் என்ற கேள்வியை எம்மை நாமே கேட்பதற்கும் இது பொருத்தமான தருணமாகும்.





எம்மில் எத்தனை வீதத்தினர் வீட்டில் எமது பிள்ளைகளுடன் தமிழில் பேசுகிறோம்? அல்லது, எங்களுக்குள் இனிய தமிழில் உரையாடுகிறோம்? எத்தனை வீதத்தினர் எமது பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்புகிறோம்? இவற்றுக்கு எம்மிடத்தில் சரியான புள்ளி விபரங்கள் இல்லாவிட்டாலும் கூட, எண்ணிக்கைகள் மிகவும் கவலைக்கிடமானவை என்பதை நாம் உய்த்துணரலாம். எம்மைச் சுற்றியுள்ள ஏனைய பல இனங்களுடன் ஒப்பிடுகையில், நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது கசப்பான உண்மையாகும்.





பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியைக் கற்பிப்பதால் கிடைக்கக்கூடிய பெறுமதிமிக்க பயன்பாடுகளைப் பற்றி ஆய்வாளர்களும், அறிஞர்களும் நிறையவே விளக்கியுள்ளனர். எனினும்கூட, தமிழ் கற்பதென்பது சிறுபான்மையோராக உள்ள ஒரு பகுதியினரைத் தவிர, ஏனையோரின் மனங்களில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.  விளையாட்டு முதல் வீணை வரை, நீச்சல் முதல் நடனம் வரை எல்லாம் முடிந்த பிறகு, ’நேரமிருந்தால் தமிழ்' என்னுமொரு நிலை உள்ளதுபோலத் தோன்றுகிறது. இதனை மாற்றுவது எவ்வாறு?





மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்கலாசாரத்துக்கும், சமூக மொழிக் கல்விக்கும் பேராதரவு தருகின்றன. விக்ரோரியாவிலும், நியூ சவுத் வேல்சிலும்  பல்கலைக்கழகம் புகுவதற்கான எல்லாப் பாடங்களையும் போலத் தமிழ்மொழியும் 12 ஆம் ஆண்டுக்கு, சமத்துவமான ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த அரிய வாய்ப்பை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பது ஏன்?





இவ் விடயத்தில், தமிழ் மொழியைக் கற்பிக்கும் பாடசாலைகளை நோக்கியும் சில கேள்விகளைக் கேட்டல் பொருத்தமானது. மிகுந்த அர்ப்பணிப்போடும், உற்சாகத்தோடும், எத்தனையோ தொண்டர்களின் உழைப்பினை உரமாக்கி உங்கள் பாடசாலைகளை நடாத்தி வருகிறீர்கள். பாராட்டத்தக்க இந்தச் சேவையின் பயனாக, சிறுவயதில் இணையும் உங்கள் மாணவர்களில் எத்தனை சத வீதத்தினர் 12 ஆம் ஆண்டு வரை பயணிக்கின்றனர்? பெரும்பாலான மாணவர்கள் இடை நடுவே தமிழைக் கைவிடுகின்றனர் எனில், அதற்கான காரணமென்ன? பல்கலைக்கழகம் செல்வதற்குக் கை கொடுக்கக்கூடிய தமிழை மாணவர்கள் கைவிடுவது ஏன்?





ஆண்டு தோறும் 12 ஆம் ஆண்டுத் தமிழ் மொழிப் பரீட்சை முடிவுகள் வெளிவரும்போது, ஒருகை விரல்களுக்குள் எண்ணக்கூடிய ஒரு சில மாணவர்கள் உயர் புள்ளிகளைப் பெறுவது வழக்கம். இந்த மாணவர்களும், சின்னஞ் சிறு வயதிலிருந்து இவர்களை உருவாக்கிய பாடசாலைகளும் பாராட்டுக்கு உரித்துடையவர்களே. எனினும் தமிழைப் பாதி வழியில் கைவிட்டவர்களைப் பற்றிச் சமூகமோ, ஊடகங்களோ கவனிப்பதில்லை. தாயகத்திலிருந்து அண்மையில் வந்து, ஓரிரு ஆண்டுகளுக்குள் இங்கே பரீட்சை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விரைந்து வீழ்ச்சியடையப் போகிறது. மழலை வகுப்பில் தொடங்கும் மாணவர்களை, அவர்களின் ஆர்வம் குன்றாது வளர்த்தெடுத்து, 12ம் வகுப்பு வரை கொண்டு செல்லக்கூடிய திறமையும், தராதரமும் கொண்ட பாடசாலைகளே எமது இன்றைய தேவை. தாயகத்திலிருந்து வந்த, மற்றும்  ”இரவல் பெற்ற” மாணவர்களின் உயர்புள்ளிகளில் குளிர் காயாமல், ஒவ்வொரு பாடசாலையும் தம்மைச் சிறு வயதிலேயே தேடிவரும் ஒவ்வொரு குழந்தையையும் அரவணைத்து, 12 ஆம் ஆண்டுவரை முன்னேற்றக்கூடிய வல்லமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.





அதேவேளை, பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோரும் தமது பொறுப்புகளை மறக்கலாகாது. பாடசாலையை ஒரு ‘மலிவான பிள்ளை பராமரிப்பு நிலையம்’ போலக் கருதி, வாயிலில் இறக்கிவிட்டுக் கடைத் தெருவுக்கு ஓடி மறையும் பெற்றோர் பற்றி நீண்ட காலமாகவே குறையொன்று உள்ளது. இவர்கள் பிள்ளையின் தமிழ் மொழிக் கல்வி பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. பிள்ளையைப் பாடசாலையில் சேர்த்தவுடன் தமது கடமை முடிந்து விட்டதாகப் பெற்றோர் கருதக் கூடாது. எவ்வாறு ஏனைய பாடங்கள் பற்றி அக்கறை எடுக்கிறோமோ அவ்வாறே தமிழிலும் அக்கறை தேவை.





முடிவாக, விரைவில் நடக்க இருக்கும் ஆஸ்ரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், தமிழர்களாகிய நாம் யாவரும் எம்மைத் தமிழர்களாக இனம் காணவேண்டியது முக்கியமானது. எனினும், அத்துடன் நில்லாது, தமிழர்களாக நாம் வாழவும் வேண்டும். வீட்டில் தமிழ் பேச வேண்டும். பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுக்க வேண்டும். அதேவேளை, தமிழ்ப் பாடசாலைகளும் தமது மாணவர்களுக்குத் திருத்தமாகக் கல்வியூட்டுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சிறு வயதிலிருந்து தாம் வளர்த்தெடுத்த மாணவர்கள் பெறும் உயர் சித்தியே தமது பெருமை எனக் கருத வேண்டும்.