தேசிய அளவில் ஜோ பிடென் முன்னணி - முக்கிய சில மாநிலங்களில் ட்ரம்ப் அலை!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

தேசிய அளவில் ஜோ பிடேன் (Joe Biden) அதிகம் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். ஆனால் வெள்ளைமாளிகைக்கான பந்தையத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் ட்ரம்ப் - பிடென் இருவருக்கும் இடையே மிக நெருக்கமான கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வருகின்றன. இதனை எழுதும் சமயத்தில் புளொரிடா, லோவா, டெக்ஸாஸ் போன்ற முக்கிய மாநிலங்களில் ட்ரம்ப் முன்னணியில் இருந்தார்.





ஆனால் தேசிய ரீதியில் ஜோ பிடேன் 220 தெரிவுகளையும் ட்ரம்ப் 213 தெரிவுகளையும் பெற்றிருந்தனர். முடிவுகள் பரபரப்புடன் வெளியாகி வரும் நிலையில் ட்ரம்ப் இடையில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். "நாங்கள் வெற்றியீட்டிவிட்டோம்" என்று அறிவித்து நடுவில் வெற்றிக்கு அவர் உரிமை கோரியிருக்கிறார்.





முக்கிய மாநிலங்களில் ஈட்டிய வெற்றிகளையும், முன்னணி நிலவரங்களையும் தனது பிரகடனத்துக்கு ஆதாரமாகக் காட்டி அறிவிப்புச் செய்துள்ளார் அவர்.முறைகேடுகள் நடப்பதாகக் கூறி வாக்கு எண்ணும் பணிகளை நிறுத்தப் போவதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார். மாறாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜோ பிடேன், "வெற்றிக்கான பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம். எனினும் பொறுத்திருங்கள்" என்று அடக்கமாகக் கூறியிருக்கிறார்.





மிக முக்கியமான ஒரு மாநிலமான புளோரிடாவில் வெற்றியீட்டியதன் மூலம் ட்ரம்புக்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.இந்த நிலமை கடந்த 2016 தேர்தலின் பெறுபேறுகளையே பிரதிபலிக்கின்றது என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.அச்சமயம் அதிக வாக்குகளைப் பெற்று தேசிய அளவில் முதனிலைக்கு வந்த வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பின்னர் தோல்வியைச் சந்திப்பதற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முறைமை வழிவகுத்ததுஎன்பது கவனிக்கத்தக்கது.





உலக தேர்தல் முறைமைகளில் விளங்கிக் கொள்வதற்குச் சற்றுச் சிரமமானது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை.சிறிலங்கா, பிரான்ஸ் நாடுகள் போன்று அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் தாங்கள் விரும்பி நேரடியாக அவருக்கு வாக்களித்துத் தெரிவுசெய்வதில்லை. மாறாக இரண்டு பிரதான கட்சிகளுக்கும் மாநிலங்கள் ரீதியாக மக்களால் அளிக்கப்படும் வாக்குகளில் இருந்து தெரிவு செய்யப்படும் 538 தெரிவாளர்களே பின்னர் தங்கள் வாக்குகள் மூலம் அதிபர் யார் என்பதைத் தீர்மானிக்கின்றனர்.





இதில் ஒரு கட்சிக்கு குறைந்தது 270 தெரிவாளர்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் கட்சியின் வேட்பாளர் வெள்ளைமாளிகைக்குள் முடி சூடலாம்.இதைவிட அமெரிக்காவின் மொத்தம் 50 மாநிலங்களில் சனத்தொகையின் அடிப்படையில் செல்வாக்குக் கொண்ட மாநிலங்கள்(Swing states) இறுதி வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியமானவை.





அந்த வகையில் இரு பிரதான கட்சிகளினதும் கோட்டைகளாக விளங்கும் அரிஸோனா, புளொரிடா, ஜோர்ஜியா, மிக்சிக்கன், மினசொற்றா வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்கான்சின் லோவா, ஓஹியோ, டெக்ஸாஸ் (Arizona, Florida, Georgia, Michigan, Minnesota, North Carolina, Pennsylvania Wisconsin, Iowa, Ohio,Texas) ஆகிய மாநிலங்கள் அதிபர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கவை.செனற் சபையை எந்தக் கட்சி கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது என்பதும் அதிபரைத் தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா பேரலைக்கு மத்தியிலும் அமெரிக்கர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை வாக்குகளை அள்ளி விளாசியிருக்கிறார்கள்.





வைரஸ் நெருக்கடியைக் கையாளும் விதம் அதனோடு தொடர்புபட்ட பொருளாதார நெருக்கடிகள் என்பன இந்த முறை அதிபர் தேர்தல் வாக்களிப்பில் செல்வாக்குச் செலுத்திய முக்கிய காரணிகளாக உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தபால் மூலம் வாக்களித்தோர் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டிருப்பதால் வாக்கு எண்ணும் பணிகள் நாட்கணக்கில் நீடிக்கும் நிலை உள்ளது.





50 மாநிலங்களிலும் ஏற்கனவே நடைபெற்றுமுடிந்த தபால் மூல வாக்களிப்பில் சுமார் நூறு மில்லியன் பேர் வாக்களித்து பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.நாட்டின் மொத்தம் 225 மில்லியன் வாக்காளர்களில் நூறு மில்லியன் பேர் தபால் மூலம் வாக்கைச் செலுத்தி இருப்பது அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது.





வழமையாக இறுதி வாக்களிப்பு தினத்தன்று இரவோ அல்லது மறுநாளோ யார் அடுத்த அதிபர் என்பதைத் தெரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு வாக்கு எண்ணும் பணிகள் முடிவடைந்திருக்கும்.ஆனால் இந்த முறை அது சாத்தியம் அல்ல என்று தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.மாநிலங்கள் தோறும் தபால் மூல வாக்குகள் வெவ்வேறு காலப்பகுதிகளில் எண்ணி முடிக்கப்படவுள்ளன. எனவே உத்தியோகபூர்வமான இறுதி முடிவு அறிவிக்கப்பட நாட்கள், வாரங்கள் ஆகலாம்.





குமாரதாஸன்