ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடு - ஜோ பைடன் விளாசல்

Politics 3 ஆண்டுகள் முன்

banner

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் விமர்சித்தார்.





ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் 2021 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேவேளை, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டும் அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.





இதன் காரணமாக டிரம்பிடம் இருந்து ஜோ பைடனுக்கு அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த குழப்பங்களால் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் இது மிகவும் கசப்பான தேர்தலாக மாறியுள்ளது.





இந்தநிலையில் டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது. இதனை அவர் தெரிவித்தார்.





இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-





டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுப்பது உண்மையில் மிகவும் வெட்கக்கேடானது. இது ஜனாதிபதியின் மரபுக்கு உதவாது என்று நான் நினைக்கிறேன்.





அதேசமயம் இது அதிகார மாற்றத்தை எந்த வகையிலும் தடுக்காது. அதிகார மாற்றத்தை மந்தமாக்கும் எதையும் நாங்கள் வெளிப்படையாக காணவில்லை. நாள் முடிவில் உங்களுக்கு தெரியும். இது ஜனவரி 20 அன்று பலனளிக்க போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.





அதிகார மாற்றத்துக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. நாங்கள் நன்றாக நடந்து கொண்டிருக்கிறோம். ஒரு நிலையான முறையில் நகர்கிறோம்.





வெள்ளை மாளிகையில் எங்கள் நிர்வாகத்தை ஒன்றிணைத்து, மந்திரிசபை பதவிகளுக்கு நாங்கள் யாரை தேர்வு செய்யப்போகிறோம் என்பதை பரிசீலனை செய்கிறோம். அதை எதுவும் தடுக்கப்போவதில்லை.





இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் மெக்ரான், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்பட 6 உலக நாடுகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி வாயிலாக பேசினேன். இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்ததும், கொரோனா வைரஸ் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் நான் அவர்களுடன் விவாதித்தேன்" - என்றார்.