தமிழக மக்கள் யார் பக்கம்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்களிப்பு

Politics 3 ஆண்டுகள் முன்

banner

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.





தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.





கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.





சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழக சட்ட சபை தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.





அதேவேளை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.





இதேபோல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.