21/4 தாக்குதல் - முன்னாள் சட்டமா அதிபரும் விசாரணை பொறிக்குள்

banner

21/4 தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தி முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் சி.ஐ.டியினர் அவரிடம் விசாரணை நடத்தக்கூடும் - என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணவர்தன தெரிவித்தார்.





பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளதென முன்னாள் சட்டமா அதிபர் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் அவரிடம் சி.ஐ.டியினர் விசாரணை மேற்கொள்வார்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவரும் சாதாரண பிரஜையே. நீங்கள் கூறிய விடயம் குறித்து நாமும் அவதானம் செலுத்தியுள்ளோம். யாராவது ஏதேனும் கருத்து வெளியிட்டால், அது சி.ஐ.டியின் விசாரணையுடன் சம்பந்தப்பட்ட விடயமெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும். எனவே, எதிர்காலத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” -என்றார்.





அதேவேளை, 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் பல கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதனையொட்டி கவலையடைகின்றேன். அது அவரின் கருத்து. தமது கருத்தை வெளியிடுவதற்குரிய சுதந்திரம் அவருக்கு இருக்கின்றது. எனினும், எவரேனும் கருத்து வெளியிடுவதாக இருந்தால் அது தொடர்பில் தகவல்களை தேடி பார்த்து, அறிவிப்பு விடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.





ஏதேனும் ஒரு தகவல் பிழையாக இருந்தால்கூட வழக்கு விசாரணை தலைகீழாக மாறக்கூடும். எனவேதான் அனைத்து காரணிகளையும் திரட்டிய பின்னர் நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர் - எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.