வடமராட்சியில் மணல் அகழ்வு! பொலிஸாரும் உடந்தையா?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

வடமராட்சி கிழக்கில் பொலிஸாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.





மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.





இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-





"நீண்ட நாள்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்தப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும்போது கடத்தல்காரர்கள் என்னைக் கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக்கொண்டு சென்றதை நேரடியாகக் கண்டேன்.





அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள். அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.





சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் வழங்கும்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து பொலிஸாரிடம் முறையிட்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. எனவே, பொலிஸாருடன் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது.





எனவே, குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" - என்றார்.