'போரை முடித்ததுபோல பசுமை விவசாயத்திலும் வெற்றி காண்பேன்'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.





உடுபந்தாவ - புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி இன்று (23) முற்பகல் சென்றிருந்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.





பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி , சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.





பின்னர் பயிர்ச்செய்கை நிலத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி , அங்கு பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தினார். உரத்தைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும் முறையையும் பார்வையிட்டார்.





விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கு நான் தயார்.





அன்று யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், 30 வருட யுத்தத்தை நிறைவு செய்தது போல் எந்தவிதத் தடைகள் ஏற்பட்டாலும், பசுமை விவசாயத்தை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.





தமக்குத் தேவை வாக்குகள் அல்ல, பொதுமக்களுக்கு சரியானதைச் செய்வதாகும் என்றும் சரியானதைச் செய்வதற்காகப் பயப்படாது தீர்மானங்களை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை மாத்திரம் கண்டறிவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.