இஸ்ரேல்மீது நேரடி தாக்குதல் நடத்துமாறு தனது நாட்டு படைகளுக்கு ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சிக்கு பின், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினியை சந்தித்து பேசினார்.அதன்பின்னர், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
இது ஈரானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு முன் நேற்று காலை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் ஒன்றை காமினி நடத்தினார். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்த படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என ஈரான் மற்றும் ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன.
எனினும், ஹனியேவை படுகொலை செய்த விடயத்தை இஸ்ரேல் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. கடந்த காலங்களில் எதிரிகளை வெளிநாடுகளில் கொன்ற வரலாற்றை இஸ்ரேல் கொண்டுள்ளது. ஈரான் அணு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவ தளபதிகளும் இந்த வரிசையில் அடங்குவார்கள்.
இதுபற்றி ஈரான் அதிகாரிகள் கூறும்போது, ஈரான் அரசு எந்தளவுக்கு வலிமையுடன் பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு ஈரான் இராணுவ தளபதிகள் கூட்டான தாக்குதலை நடத்த கூடும் எனக் குறிப்பிட்டனர்.
ஆனால், குடிமக்கள் மீது தாக்குதல் நடக்காமல் தவிர்க்கும் வகையில் கவனம் கொள்ளப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆஸ்திரேலியா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
லெபனான்மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளதால் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை ஆஸ்திரேலியர்கள் அலட்சியப்படுத்தக்கூடாது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
தனது எக்ஸ் தளத்தில் விசேட காணொளியொன்றை வெளியிட்டே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களை உடன் வெளியேறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2006 இல் லெபனானில் போர் மூண்டபோது அங்கிருந்து 5000 ஆஸ்திரேலியர்களை வெளியேற்றுவதற்கு ஆஸ்திரேலியா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இம்முறையும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதைத்தவிர்க்கவே முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் உள்ளனர் என ஆஸ்திரேலிய அரசு மதிப்பிட்டுள்ளது. எனினும், 20 ஆயிரத்துக்கும், 30 ஆயிரத்துக்கும் இடைப்பட்டவர்கள் அங்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.