Doveton பகுதியில் இன்று காலை நபரொருவர்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.
Paperbark தெருவிலுள்ள வீடொன்றில் ஆணொருவருக்கும், பெண்ணுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அயலவர்களால் முறையிடப்பட்ட பின்னர் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர்.
அப்போது பிரச்சினை முடிந்திருந்தது. பொலிஸார் சென்ற முகவரியில் எவரும் இருக்கவில்லை. பின்னர் காலை 10.30 மணியளவில் அதே முகவரிக்கு பொலிஸார் மீண்டும் அழைக்கப்பட்டனர்.
இதற்கமைய அங்கு சென்ற பொலிஸார், வீட்டு வளாகத்தில் இருந்த ஆணொருவருடன் பேச முற்பட்டனர். அவ்வேளையில் ஆயுதம் தாங்கிய நபர் பொலிஸாரை நோக்கி வேகமாக ஓடிவந்துள்ளார்.
இதனையடுத்து அவரை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
காயமடைந்த 33 வயது நபர், பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடக்கின்றது. பொலிஸார் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதா என்பது பற்றியும் ஆராயப்படுகின்றது.