சிட்னியில் புனித வெள்ளியன்று கடலில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் காணாமல்போன தமிழ் இளைஞனை தேடுவதற்குரிய நடவடிக்கையை தொடருமாறு அவரது குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், ஆஸ்திரேலியா பரமட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட 24 வயதான அட்ஷயன் அருணாச்சலம் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
ஈஸ்டர் வெள்ளியான கடந்த 18 ஆம் திகதி அட்ஷயன் தனது நண்பர்கள் சகிதம் குளிக்க சென்றுள்ளார்.
இவ்வாறு குளித்துக்கொண்டிருக்கையில் திடீரென வந்த ராட்சத அலையிலேயே அவர் அள்ளுண்டு சென்றுள்ளார். மற்றைய இளைஞர் ஒருவரின் தலை பாறைமீது பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார்.
அட்ஷயனை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே தேடுதலை தொடருமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அட்ஷயன் காணாமல்போயுள்ளமை அவரது குடும்ப உறுப்பினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை மீட்டுவிட முடியும் என குடும்ப உறுப்பினர்கள் நம்புகின்றனர்.
அதேவேளை, ஈஸ்டர் பண்டிகை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி அறுவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.