கனடாவில் நடைபெற்ற கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு கை கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வர்த்தகப் போர் மற்றும் இணைப்பு அச்சுற்றுத்தல்களுக்கு இடையே கிடைக்கப் பெற்ற இந்த வெற்றியை பிரதமர் மார்க் கார்னி உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார்.
343 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 43.4 சதவீத வாக்குகளுடன் 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 41.5 சதவீத வாக்குகளுடன் 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதர 3 கட்சிகள் மொத்தம் 31 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
ஏற்கனவே தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சி 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு போதிய இடங்கள் கிடைக்காவிட்டாலும், சிறிய கட்சிகளின் உதவியுடன் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதால் அதன் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.