அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அணுகுமுறைகள் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தியதுபோல, ஆஸ்திரேலிய தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மே 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. பரப்புரை போரின்போது ட்ரம்பின் வர்த்தகப் போர் பற்றியும் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக இணைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். தற்போதுகூட அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்.
அதுமட்டுமல்ல கனடாவில் அப்போது பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை கவர்னர் எனவும் அழைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில் கனடாவில் லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியில் இருந்து விலகி மார்க் கார்னியை பிரதமராக்கினார்.
தொழிலதிபரும் வங்கியாளருமான மார்க் கார்னி, இந்த தேர்தலில் ட்ரம்ப் விடுத்த இணைப்பு கோரிக்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.
கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ட்ரம்ப் கூறியது நிஜமாகும் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார்.
ஒரு கட்டத்தில் கருத்து கணிப்புகளில் லிபரல் கட்சி பின்னடைவை சந்தித்திருந்தது. எனினும், தேசியவாத உணர்வால், ட்ரம்பின் வர்த்தக போரை சமாளிக்க கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் லிபரல் கட்சி வேட்பாளரை கனடா மக்கள் பிரதமராக்கியுள்ளனர்.
கனடாவில் லிபரல் கட்சி மீண்டெழுவதற்கு ட்ரம்பின் அணுகுமுறை பிரதான காரணியாக அமைந்தது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல உலகளவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை என்பவற்றால் ஆஸ்திரேலியாவில் நிலையானதொரு ஆட்சியின் அவசியத்துவம் உணரப்பட்டுள்ளது.
கனடா மற்றும் ஆஸ்திரேலிய நிலைவரங்களுக்கிடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், ட்ரம்ப் விவகாரத்தில் ஒருமித்த பண்புகளும் உள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ட்ரம்பின் அணுகுமுறை கனடா தேர்தலில் பெரிதும் எதிரொலித்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் அவ்வாறு நடக்கவில்லை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், ட்ரம்பின் அணுகுமுறையை பின்பற்றி வருவதால் அவரின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் இரு கட்சி முறைக்கு அப்பால் சில மக்கள் சுயாதீன கட்சிகளை ஆதரிக்கும் முடிவில் உள்ளனர் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.