ஆஸ்திரேலியாவில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 18 மில்லியன் பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 5.6 மில்லியனுக்கு அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.
முன்கூட்டியே வாக்களிப்பதற்கு வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. எஞ்சியோர் நாளை வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, தேர்தலுக்குரிய இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோர் இன்று தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஆளுங்கட்சியான லேபர் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணிக்கிடையில்தான் கடும் போட்டி நிலவுகின்றது.
இதுவரை வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளின் அடிப்படையில் லேபர் கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என தெரியவந்தாலும், கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அகதிகள் நலன்சார் விடயங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படும் கிறீன்ஸ் கட்சிக்குரிய வாக்கு வங்கியும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.