நியூ சவூத் வேல்ஸ் நெடுஞ்சாலையில் பயணித்த கனரக வாகனத்தில் இருந்து உலோகத் துண்டுகள் சிதறி விழுந்ததால் 300 இற்கு மேற்பட்ட வாகனங்கள் சேமடைந்துள்ளன.
உலோகங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தில் இருந்து இவ்வாறு உலோகக் கழிவுகள் வீதியில் விழுந்ததால் மேற்படி வாகனங்களின் டயர்கள் பஞ்சராகியுள்ளன.
இதனால் குறித்த வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. கனரக வாகனத்தில் 40 தொன் உலோகக் கழிவுகள் இருந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. 46 வயது சாரதியிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயமோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை.
சம்பவம் நடைபெற்ற நெடுஞ்சாலை தற்போது சுத்தப்படுத்தப்பட்டுவருகின்றது. இதற்கு முழு நாள் எடுக்கலாம் எனவும், எனவே, சாரதிகள் அவதானமாக வாகனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டயர்கள் சேதமடைந்த வாகனங்களை இழுத்து செல்வதற்கு பெருமளவான இழுவை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அதேவேளை, உலோகம் ஏற்றி பயணித்த கனரக வாகனத்தின் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. சேதமடைந்த வாகனங்களுக்குரிய கட்டணமும் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
சபா.தயாபரன்.