நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தோல்வியடைந்துவிட்டதால் லிபரல் கட்சிக்குள் தலைமைத்துவ போர் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் இதனை சீர்செய்வதற்குரிய முயற்சியில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய லிபரல் கட்சியின் நிழல் பொருளாளர் ஆங்கஸ் டெய்லரை கட்சி தலைவராகவும், நிழல் குடியேற்ற அமைச்சர் டான் டெஹானை துணை தலைவராகவும் நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் உள்ளக மோதல் மேலும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் குறிப்பாக லேபர் கட்சி சார்பில் அதிகளவான பெண் எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர்.
இதற்கிடையில் கிறீன்ஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சந்தா ரத்னத்தால் நாடாளுமன்றம் தெரிவாவதற்குரிய வாக்கு வீதத்தை பெறமுடியாமல்போயுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அவருக்கு மக்கள் ஆதரவு இருப்பதை அவருக்கு விழுந்துள்ள வாக்குகள் வெளிப்படுத்துகின்றன என்று கிறீன்ஸ் கட்சி செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறீன்ஸ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்ட சமந்தா ரத்னம், பெடரல் தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமைப்பதவியை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.