திரைப்பட துறையிலும் ட்ரம்ப் கை வைப்பு: மாற்று வழி தேடுகிறது ஆஸி.!
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்தக் கட்டண முறை ஹாலிவுட் சினிமா துறைக்கும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆஸ்திரேலிய திரைப்பட துறைக்கும் தாக்கமாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
' அமெரிக்க படங்களில் ஆஸ்திரேலிய நடிகர்களும் பணியாற்றுகின்றனர். ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட அமெரிக்க படங்களும் உள்ளன. அமெரிக்காவின் கலைத்துறைக்கு எம்மவர்களின் பங்களிப்பு உள்ளது. எனவே, அதற்கு இடையூறாக வரி விதிப்பு அமையக்கூடாது." - என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, டிரம்பின் வரிகளை எதிர்கொள்ளும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆஸ்திரேலியா முயற்சித்துவருகின்றது எனவும் அவர் கூறினார்.