மெல்பேர்ணில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயுதக் கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட குழப்பத்தால் 24 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெல்பேர்ண் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையத்திலேயே தரைப்படை பாதுகாப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1200 பேர்வரை அணிதிரண்டனர். பல வருடங்களுக்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய போராட்டமாக இது கருதப்படுகின்றது. இதனால் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டக்காரர்கள் பொலிஸார்மீது கல், குதிரை மலம் மற்றும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். அதன்பின்னர் போராட்டம் வன்முறையாக மாறியது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் pepper spray பயன்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்டனர் எனக் கருதப்படும் 39 பேரை கைது செய்தனர். இதன்போது தள்ளு முள்ளும் ஏற்பட்டது. உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.