பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் அரசின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதென அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்குரிய ஆணையை ஆளுங்கட்சியான லேபர் கட்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் புதிய அமைச்சரவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதமர் தலைமையில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.
அந்தவகையில் புதிய அமைச்சரவை எதிர்வரும் திங்கட்கிழமை இறுதிப்படுத்தப்பட்டு, அது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சுகளில் மாற்றம் வராது என தெரியவருகின்றது. அப்பதவிகளை ஏற்கனவே வகித்த லேபர் கட்சியின் பிரமுகர்கள், அதே பதவிகளில் தொடர்வார்கள்.
அத்துடன், சில புது முகங்கள் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் பூர்வக்குடி விவகாரம் தொடர்பான அமைச்சுகள் யாருக்கும் வழங்கப்படும் என்பது தொடர்பான விபரமும் திங்கட்கிழமை வெளியாகும் என அறியமுடிகின்றது.
அதேவேளை, லிபரல் கட்சிக்குரிய தலைமைத்துவத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பிலும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லிபரல் கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.