2010 ஆம் ஆண்டிலிருந்து மெல்பேர்ண் தொகுதியில் வெற்றிநடைபோட்டுவந்த கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பாண்ட், இம்முறை தோல்வியடைந்துள்ளார்.
தோல்வியை இன்று ஒப்புக்கொண்ட அவர், வெற்றிபெற்ற லேபர் கட்சி வேட்பாளர் சாரா விட்டிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
வாக்காளர் விருப்பத்துக்கு மாறாக மெல்பேர்ண் தொகுதியில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பே தனது பின்னடைவுக்கு பிரதான காரணம் என கிறீன்ஸ் கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கருத்தும் உண்மைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் ஆய்வாளர்கள், இஸ்ரேல், ஹமாஸ் போர் விவகாரத்தில் கிறீன்ஸ் கட்சி கையாண்ட அணுமுறையும் தோல்விக்கு மற்றுமொரு காரணம் எனக் குறிப்பிட்டனர்.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவரின் பொறுப்பற்ற பிரச்சாரம் தமது தொகுதியில் லேபர் கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது எனவும் கிறீன்ஸ் கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
கிறீன்ஸ் கட்சி சார்பில் 2010 ஆம் ஆண்டில் பிரதிநிதித்துவ சபைக்கு தெரிவான ஆடம் பாண்ட், 2020 ஆம் ஆண்டு கிறீன்ஸ் கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
அநீதிக்கு எதிராகவும் நீதிக்காகவும், கிறீன்ஸ் கட்சியின் கொள்கையை மக்கள் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு ஆடம் பாண்ட் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அத்துடன், அகதிகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியில் தோற்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் இரண்டாவது தலைவர் கிறீன்ஸ் கட்சி தலைவராவார்.
எனவே, புதிய தலைவரை கிறீன்ஸ் கட்சி விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.