அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ், புதிய போப் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின், 2,000ஆம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறையாகும்.
இது பெருமைமிக்க தருணமாகும், அமெரிக்கா பெருமை அடைகின்றது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், இத்தாலியின் வத்திக்கானில் கடந்த மாதம் 21ஆம் திகதி காலமானார்.
இதையடுத்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை ஆரம்பித்தது.
போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும்.
புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானால் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அர்த்தம்.
இந்நிலையில், போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் கடந்த இரண்டு நாட்களாக ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இரண்டு கட்டங்களாக நடந்த தேர்வில், புதிய போப் தேர்வு செய்யப்படாத நிலையில், நேற்றிரவு மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், புதிய போப் தேர்வு செய்யப்பட்டார். அதை குறிக்கும் வகையில் இரவு 10 மணிக்கு புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன்னால் தோன்றிய புதிய போப், தனது முதல் கருத்துக்களை லியோ வெளியிட்டார்,
சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ், உலகளாவிய அனுபவமுள்ள ஒரு தலைவர்.
தென் அமெரிக்காவில் ஒரு மிஷனரியாக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்துள்ளார். மேலும் அமெரிக்காவிலும் பெருவிலும் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார், அங்கு அவர் ஒரு பிஷப்பாக பணியாற்றினார்.
அவர் சமீபத்தில் பிஷப் நியமனங்களுக்கான சக்திவாய்ந்த வத்திக்கான் அலுவலகத்திற்கு தலைமை தாங்கினார். போப் பிரான்சிஸின் சீர்திருத்தங்களை அவர் கட்டியெழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார்.
அதேவேளை, புதிய போப்புக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா நடத்தவுள்ள கற்கருணை மாநாட்டுக்கு போப்பை ஆஸ்திரேலியா அழைக்கும். அவரது வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய கத்தோலிக்கர்களும் அரசியல்வாதிகளும் புதிய போப் லியோ XIV இன் நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர், மேலும் அவர் தனது முன்னோடி அமைதி மற்றும் சமூக நீதிக்கான முக்கியத்துவத்தைத் தொடருவார் என்று பலர் நம்புகின்றனர்.
சபா.தயாபரன்.