ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுக்கிடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று 2ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற அந்தோனி அல்பானீஸி தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.
ஜகார்த்தாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அத்துடன், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுடன் உயர் மட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த வரும் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அதேவேளை, இந்தோனேசியாவுடன் இராணுவ உறவை வலுப்படுத்துவதற்கு ரஷ்யா முயற்சிக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருந்தன. தமது போர் விமானங்களை இந்தோனேசியாவில் நிலை நிறுத்துவதற்கு ரஷ்யா அனுமதி கோரியதாக வெளியான தகவலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
எனினும், ரஷ்ய தரப்பில் இருந்து அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இந்தோனேசியா தெரிவித்தது. இந்நிலையில் மேற்படி சந்திப்பின்போது இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் கேள்வி எழுப்பவில்லை என அறியமுடிகின்றது.
சபா.தயாபரன்.