அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இடையில் சபையில் நேற்று கடும் சொற்போர் மூண்டது.
இருவரும் சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்துக்கொண்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று இராமலிங்கம் சந்திரசேகரன் உரையாற்றிய பின்னர், அர்ச்சுனா எம்.பிக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
தனது உரையின் ஆரம்பத்திலேயே அமைச்சர் சந்திரசேகரனை விமர்ச்சிக்க தொடங்கினார் அர்ச்சுனா. அமைச்சர் பயன்படுத்தும் தமிழில் உள்ள பிழைகளையும் நக்கல் பாணியில் சுட்டிக்காட்டினார்.
'தமிழரசுக் கட்சியென்பது தமிழ் மக்களின் இதயம். தேசியத் தலைவர் உருவாக்கிய கட்சி. காசு, கசிப்புக்காக அக்கட்சிக்கு வாக்களிக்கின்றனர் என அமைச்சர் கூறியதன்மூலம் தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.
யாழில் இருக்கின்ற தமிழன் பணத்துக்காக ஓட்டு போடாதவன். தேசியத்தில் வாழ்ந்த நாங்கள், காசுக்காக, கசிப்புக்காக வாக்கு போடமாட்டோம்." - என்றும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர், அர்ச்சுனா எம்.பியை விளாசித்தள்ளினார்.
'ஜட்டியா, ஜெட்டியா என்பதைவிட இவர் ஜட்டியை இன்று தலையில் போட்டுக்கொண்டு நாறுகிறது, நாறுகிறது என சத்தம் போடுகின்றார். அது மாத்திரம் அல்ல மொழியை கொச்சைப்படுத்துகின்றார். மலையக மக்களை மற்றும் பெண்களை கொச்சைப்படுத்துகின்றார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஒரு உறுப்பினரைக்கூட பெறுவதற்கு வக்கில்லாத கூத்தாடியே இவர்." - எனவும் விமர்சித்தார்.
அர்ச்சுனா வசூல் மன்னர் என வெளிநாட்டில் உள்ளவர்கள் கழுவி ஊத்துகின்றனர். தேர்தல் காலங்களில் மக்களின் பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளார்." என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி.,
' தமிழ் மக்கள் மற்றும் தமிழ் டயஸ்போராக்களே என்னை நாடாளுமன்றம் கொண்டுவந்தனர். எனக்கு கோடி கணக்கில் பணம் வழங்கினர். நான் மக்களுக்காக வைத்திய சேவையையும் விட்டுவிட்டு வந்தவன்." - என்று சிரித்தப்படியே குறிப்பிட்டார்.