நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நகர மையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் வீட்டு கூரைகள்மீது இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை சில பகுதிகளில் 280 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினருக்கு 80 இற்கு மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்துள்ளன.
அடுத்துவரும் நாட்களிலும் அடை மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாரிய இழப்பு ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 1929 ஆம் ஆண்டுக்கு பிறகு மானிங் நதியில் இம்முறையே பெரும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள கால்நடைகள்இ வளர்ப்பு பிராணிகள் என்பவற்றை தன்னார்வ தொண்டர்கள் மீட்டுவருகின்றனர்.