ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் பெய்த அடை மழையால் நியூஸ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
நியூ சவூத் வேல்ஸில் டாரி, கெம்ப்சி, போர்ட் மெக்குவாரி, காப்ஸ் ஹார்பர் மற்றும் பெல்லிங்கன் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. டாரி நகரில் மட்டும் ஒரு மாதத்திற்கு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது.
தொடர் கனமழையால், நியூஸ் சவுத் வேல்ஸில் ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளம் குடியிருப்புகளை நோக்கி பாய்ந்தது.
நூற்றுக்கணக்கான வீடுகளும், சாலைகளும் நீரில் மூழ்கின. வீடுகளின் மேல்பகுதியிலும், பாலங்களிலும் தஞ்சமடைந்த மக்களை ,ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி அவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்டவற்றால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் வரையிலான வீடுகள் சேதமடைந்துள்ளன.